பாடுக பாட்டே...!
பெண்கள்தம் உடலழகைப் பாடிப் பாடிப்
பெருமூச்சு விட்டதெல்லாம் போதும் போதும்
கண்முன்னே பேருந்தில் இடிக்கின் றார்கள்
கடைத்தெருவில் உடலுரசிச் செல்கின் றார்கள்
கண்ணடித்தும் இருபொருளில் சொல்லு திர்த்தும்
கைகளிலே பலசெய்கை காட்டு கின்றார்
வெண்பாவில் தீகக்கு விருத்தப் பாவில்
வெட்டவர்கள் பாலியலின் வக்கி ரத்தை !
பட்டங்கள் பெற்றபின்பும் செயற்கைக் கோளில்
பறந்தபின்பும் பதவிகளில் அமர்ந்த பின்பும்
தட்டணைணைக் கேட்டின்னும் பெண்கள் தம்மைத்
தலைகுனிய நிற்கவைத்தும் பாடக் கேட்டும்
குட்டுகின்ற பெண்ணடிமை ஆணா திக்கக்
குரூரத்தை எதிர்க்கின்ற பாடல் பாடு
எட்டியுதை தரும்துணிவைப் பெண்கட் கூட்டும்
எழுச்சிப்பா வல்லெழுத்தில் பாடு பாடு !
காதலுக்குள் சாதிபார்த்துத் தெருவில் வெட்டும்
கயவரினை எச்சரிக்கும் பாடல் பாடு
பாதகத்தைச் செய்கின்ற ஆட்சி யாளர்
பணிசெய்யப் பணம்கேட்கும் அலுவ லர்கள்
வாதங்கள் வெட்டியாகச் செய்து நாட்டின்
வளர்ச்சிதனைக் கெடுப்பவர்கள் திருந்து தற்கும்
மோதலின்றிச் சமத்துவத்தில் இந்தி யர்கள்
மொத்தமுமாய் வாழவழி காட்டிப் பாடு !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.