வலிகள் வழிகளாயின
எள்ளல்கள் ஏளனங்கள் தாழ்ந்த சாதி
என்கின்ற இல்லாத வாலை ஒட்டிக்
கள்ளரினைப் பார்பதைப்போல் பார்க்கும் பார்வை
கயமையினைச் செய்ததைப்போல் குத்தும் பேச்சு !
தள்ளிவிட்டுக் குழிபறிக்கும் குதிரை போன்று
தத்திமேலே வருவதற்கும் விட்டி டாமல்
முள்வேலித் தடைபோட்டுச் சாலை யெல்லாம்
மூடிவைக்கும் மேல்சாதித் திமிரின் கைகள் !
மேல்துண்டை இடுப்பினிலே கட்ட வேண்டும்
ஃமேனியெல்லாம் குறுகிடவே உடல்வ ளைத்துக்
கால்செருப்பைக் கைகளிலே ஏந்த வேண்டும்
கனல்தெருவில் வெறுங்காலில் நடக்க வேண்டும் !
ஏல்கல்வி கற்பதற்கும் உரிமை யின்றி
ஏற்றகுலத் தொழில்செய்ய வேண்டு மென்று
நால்வர்ண பாகுபாட்டு வண்ணம் பூசி
நாயுக்கும் கீழாக ஒதுக்கி வைத்தார் !
சும்மாவாய்க் கிடைக்கவில்லை இந்த மாற்றம்
சூடுபோட்ட கைகளினை எதிர்ப்ப தற்குப்
பொம்மைகளாய் இருந்திட்ட மனங்க ளுக்குள்
பொறிசொரணை மானத்தை நெருப்பா ஊட்ட
அம்பேத்கார் பெரியாரின் போராட் டங்கள்
ஆதிக்க ஆணவத்தைச் சாய்த்த திங்கே
எம்முடைய வலிகளெல்லாம் எண்ணெய் ஆகி
எரிகிறது ஒளித்திரியில் இருளை யோட்டி !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.