வேகம் விவேகமன்று
விரைவாகச் செல்கின்ற உலகத் தோடு
விரைவாக நாம்செல்ல வேண்டு மென்று
வரையறைகள் உடைத்தெறிந்து பாது காக்க
வகுத்துவைத்த விதிமுறைகள் தகர்த்தெ றிந்து
கரையுடைக்கும் வெள்ளம்போல் பாய்ந்து சென்றால்
காலனையே கைதட்டி அழைப்ப தாகும்
புரையானக் கால்தன்னை வெட்டல் போன்று
புலராத இருளாகும் நம்மின் வாழ்வே !
சிந்தித்துச் செயல்பட்டால் உண்டு வாழ்வு
சிறகடித்துப் புள்ளைப்போல் பறப்ப தற்குச்
சிந்தனையே செய்யாமல் எம்பி எம்பி
சிறகுகளாய்க் கைவிரித்தால் விழுவோம் கீழே
எந்தவொரு செயல்தன்னைச் செய்வ தற்கும்
ஏற்றறிவு அனுபவம்தான் இல்லை யென்றால்
சிந்தியாமல் கொட்டியவாய்ச் சொற்கள் போன்று
சிறப்பிழக்கும் பெரும்பழிதான் வந்து சேரும் !
பிஞ்சினிலே பழுத்தபழம் சுவையை நல்கா
பிறைநிலவோ குளிர்ச்சியான ஒளியைத் தாரா
எஞ்ஞான்றும் சினம்நமக்கு நன்மை செய்யா
எப்பொழுதும் அதிவேகம் மகிழ்வை ஈயா
பஞ்சுதனைத் தீபற்றி அழித்தல் போன்றே
பணிவில்லா ஆணவமும் அழிக்கும் நம்மை
நஞ்சினையே அமுதாக்கும் அன்பைப் போல
நாம்காட்டும் நிதானம்தான் நம்மைக் காக்கும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.