விடியலென எழுகநீ
அஞ்சியஞ்சி வாழ்கின்ற அவலம் நீங்கும்
அதிகார ஆர்ப்பாட்ட அல்லல் நீங்கும்
விஞ்சிநிற்கும் கையூட்டின் நஞ்சு நீங்கும்
விளைந்திருக்கும் ஊழல்முட் புதர்கள் நீங்கும்
கெஞ்சிநின்று கால்வீழும் கொடுமை நீங்கும்
கேடுகளே நிறைந்திருக்கும் ஆட்சி நீங்கும்
கொஞ்சுமெழில் இன்பமுடன் நலங்கள் வாழ்வில்
கொலுவேறும் விடியலென நீயெ ழுந்தால் !
செந்தமிழே கோலோச்சும் ! துறைகள் தோறும்
செழிக்கின்ற ஆட்சியாகும் ! செவ்வாய் செல்லும்
சிந்தனையின் அறிவியலும் தமிழே யாகும்
சிரிக்கின்ற மழலைவாய் அம்மா வாகும்
சந்தமிகு தமிழ்வழியில் கல்வி யாகும்
சதிராடும் உணர்வெல்லாம் தமிழே யாகும்
நந்தமிழர் நாடெல்லாம் தமிழே பேசும்
நலம்சேர்க்கும் விடியலென நீயெ ழுந்தால் !
தன்னலங்கள் பொதுநலமாய் ஏற்றம் கொள்ளும்
தளர்ச்சியின்றி உழைக்கின்ற எண்ணம் ஊறும்
வன்முறையை எதிர்க்கின்ற துணிவு விஞ்சும்
வளரறத்தைப் பேணுகின்ற கருத்தே நிற்கும்
கன்னியரை விலையின்றிக் கரங்கள் பற்றும்
கலப்புமணத் தால்சாதி மதங்கள் வீழும்
நன்நயமாய் மனிதநேயப் பண்பே ஓங்கும்
நன்மைதர விடியலென நீயெ ழுந்தால் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.