கிராமத்தைக் காத்திடுவோம்
வயதெனக்கோ ஏழுபத்து ; கிராமம் விட்டு
வயல்துறந்து படிப்பதற்குச் சென்ற போது
வயதன்று பதினாறு ; கல்வி கற்று
வாய்த்திட்ட பணியாற்றிக் குடும்ப மாகிப்
பயல்களுக்குத் திருமணமும் முடித்து விட்டுப்
பணிஓய்வுக் காலத்தைக் கழிப்ப தற்கே
அயலூரில் இருந்தநானோ சொந்த ஊர்க்கே
அடியெடுத்து வைத்திட்டேன் மகிழ்ச்சி யோடே !
வரவேற்பு தந்துஊரின் முகப்பு தன்னில்
வளர்ந்துநின்ற புளியமரம் காண வில்லை
சரம்சரமாய்க் கட்டடங்கள் வரிசை யாக
சந்தனமாய் மணந்தசெம்மண் பூமி இல்லை !
விரல்கோர்த்து பம்பரமும் கோலிக் குண்டும்
விளையாடி மகிழ்ந்தயிடம் தெரிய வில்லை
குரலெடுத்துக் கூவிநண்பர் தோள ணைத்துக்
குளிப்பதற்குச் சென்றகேணி ஆறும் இல்லை !
ஒற்றையடிப் பாதையிலே கரும்புத் தோட்டம்
ஒய்யாரத் தோப்பினிலே குயில்கள் கூட்டம்
நெற்றியைப்போல் இருந்தவயல் எல்லாம் எங்கே
நேற்றிருந்த இவையெல்லாம் போன தெங்கே !
கற்பதற்குப் போனதென்றன் குற்றம் தானோ
களவாகிப் போனதுவே கிராமம் இன்று
வெற்றுக்கே இருந்திடேன்நான் இனியென் வாழ்வு
வேர்போன்ற கிராமத்தை ஆக்கு தற்கே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.