உழைப்பு
முதுகு வியர்வை
முத்துக்கள் உடையச் சுமந்த
அரிசி மூட்டையின் அரிசியில்
சற்று உவர்ப்பிருக்கலாம்.
சிரசிலிருந்து
பொலப்பொல என வழியும்
பின் கழுத்து வியர்வை பட்டு
மூட்டையின் தையல் பகுதிவரை
நனைந்திருக்கிறது.
கடைசி மூட்டையை
நான் சுமக்கும் தருணம்
முதல் மூட்டையில் வியர்வை ஈரம்
அற்றுப் போயிருக்கலாம்
என்றாலும் உவர்ப்பிருக்கும்.
இன்றைய பொழுதுக்கும்
இன்றைய பசிக்கும்
இந்தக் கூலி போதுமானது
நாளைக்குப் பருப்போ
சர்க்கரையோ அரிசியோ
காய்கறி மூட்டையையோ
சுமக்க என் முதுகும் இருக்கும்
நானும் இருப்பேன்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.