அணுக்குண்டை வீழ்த்தும் ஆயுதம்
கற்பனையில் நாம்நினைத்துப் பார்த்தி டாத
கனவுகளை நனவுகளாய் மாற்று கின்ற
அற்புதங்கள் பலவற்றை நடத்து கின்ற
அறிவியலின் மேதையவர் ஓப்பன் ஈமர்
பற்பலவாய் சிந்தனையில் மூழ்கி மூழ்கிப்
பாரழிக்கும் அணுக்குண்டாம் ஆயு தத்தை
முற்றாகத் தம்மறிவைச் செலவ ழிந்தே
முயற்சியுடன் செய்ததிலே வெற்றி பெற்றார் !
அழிக்கின்ற ஆயுதத்தைச் செய்த அந்த
அறிவியலின் அறிஞரிடம் அவரின் நண்பர்
அழிக்கின்ற கொலைக்கருவி தனையெ திர்த்தே
அதைத்தடுக்கும் பாதுகாப்பு கருவி உண்டோ
விழிப்பாக இருப்பதற்கே சொல்க என்று
விழிகளிலே அச்சமுடன் பதறிக் கேட்டார்
விழியுயர்த்திச் சமாதானம் ஒன்றே அந்த
விபரீதம் தடுக்கின்ற கருவி என்றார் !
அண்ணலுடன் மார்ட்டீனும் உலகில் இந்த
அகிம்சையெனும் வழியைத்தான் போதித் தார்கள்
தண்ணீர்தான் தாகத்தைத் தீர்த்தல் போல
தரணிதனை அமைதியொன்றே பாது காக்கும்
கண்ணீரின் அவலத்தில் சுடுகா டாகக்
கருகுதற்கா அறிவியலின் அற்பு தங்கள்
எண்ணத்தில் இதைப்பதித்தே மனித நேயம்
என்கின்ற மந்திரத்தால் வளமாய் வாழ்வோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.