புத்தாண்டில் பூக்க வேண்டும்
நிலவினிலே கால்வைத்தோம் செயற்கைக் கோளை
நீல்வானில் பறக்கவிட்டோம்; கண்ணால் செவ்வாய்
நிலம்பார்த்துக் காலூன்றி இறங்க வேண்டும்
நிறைந்துள்ள வளங்களினை அறிய வேண்டும் !
புலம்பெயர்ந்தே அடுத்தகோளில் வாழ வேண்டும்
புரியாத இயற்கைபுதிர் புரிய வேண்டும்
நலமாக இவையெல்லாம் பிறக்கும் இந்த
நல்லபுது ஆண்டினிலே மலர வேண்டும் !
வான்முட்டும் தொழிற்சாலை அணைகள் என்றே
வளம்பெருக்கும் தொழிற்புரட்சி நாட்டில் செய்தோம்
தேன்சுவையாய் வாழ்வினிக்க விஞ்ஞா னத்தால்
தேவையெனும் கருவிகளை ஆக்கிக் கொண்டோம் !
வான்படல ஓசோனின் துளையும் நீங்கி
வற்றாத கங்கைநீர்கா விரியில் சேர்ந்து
மேன்மேலும முன்னேற்றம் பிறக்கும் இந்த
மேன்மையுடை புத்தாண்டில் நடக்க வேண்டும் !
வீட்டிற்குள் இணையத்தால் உலகை வைத்தோம்
வீதிக்குள் சாதிகளால் பகைமை வைத்தோம்
நாட்டிற்குள் பதவிகளால் சண்டை வைத்தோம்
நன்நெஞ்சுள் தன்னலத்தால் நஞ்சை வைத்தோம் !
கேட்டிற்கே துணையாம்இக் கீழ்மை நீங்கிக்
கேடகன்று மனத்தினிலே மனித நேயக்
கூட்டுறவால் வாழ்வெல்லாம் மகிழ்ச்சி தம்மில்
கூடுமின்பம் புத்தாண்டில் பூக்க வேண்டும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.