சமத்துவப் பொங்கல்
சாதிமத எண்ணத்தைச்
சாய்க்கின்ற காழ்ப்புணர்வை
வீதிகளில் வளர்க்காமல்
விட்டெரிப்போம் போகியிலே !
வஞ்சகத்தைப் பகைமையினை
வழித்தெறிந்து மங்கலமாம்
மஞ்சளெனும் மனிதநேயம்
மனங்களிலே ஒளிரவைப்போம் !
அன்பென்னும் தோரணத்தால்
அகமெல்லாம் அழகுசெய்து
முன்நின்று அனைவரையும்
முகம்பார்த்து வரவேற்போம் !
பச்சரிசி வெல்லமொடு
பாலூற்றிப் பானையிலே
மெச்சிடவே சமத்துவமாம்
மென்பொங்கல் பெங்கிடுவோம் !
கரும்பாகக் கலந்துபேசி
காளைபசு தொழுதுபோற்றி
அரும்சுற்றம் மகிழ்ந்துகூடி
அனுபவிப்போம் காணும்பொங்கல் !
தமிழரெலாம் ஒன்றுகூடி
தமிழ்ப்பண்பு உலகறிய
அமிழ்தாகத் தைப்பொங்கல்
ஆடிப்பாடிக் கொண்டாடுவோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.