விதையின் வேதனை
சீர்த்தெழுந்து புவி பிளந்து
விதை சற்றே உயிர் பெற்றெழுந்து
முதல் சுவாசம் கண்டு
முதல் மழை உண்டு
துளிர் விட்டு தன் வருகை அறிவித்து
நாலாபுறமும் விரோதம் சம்பாதித்து
கரியமிலம் கொண்டு ஒளிச்சேர்க்கையதன்
துணையால் ஒருவேளை உணவுண்டு
துளிர் வளர்ந்து கிளையாக
கிளை வளர்ந்து இலையாக
சுற்றத்து மாந்தர் சுற்றி வேலி கட்டி சிறையிட
சில வருடம் சிறைக்குள் கழித்து
நெகிழியுடன் நெருடி அவ்வப்போது
வான் தந்த பால் வருடி
ஆண்டுகளின் வேகத்தால் அசுர வளர்ச்சி பெற்று
தண்டெனும் தங்கத்தால் பச்சை மேகம் தாங்கி
இடர் தந்த இம்சைக்கெல்லாம்
இனிமையாய் நிழல் தந்து
என் சுவாசம் ஈந்து உனை வாழ வைத்தால்
கூரான கோடாரி கொண்டு
தாயான எனை நெருங்கி
நெஞ்சாங்கூட்டை பிளந்து கொண்டிருக்கிறாய்
இருக்கட்டும் நான் வீழும் வரை
நீ வாழ் மகனே!!
இப்படிக்கு,
மரம் எனும் விதை
- ஸ்ரீ சரண். கு , பழநி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.