சிசு
கும்மிருட்டிலிருந்து
குறி பார்த்துக் கொண்டிருக்கிறது
பிரபஞ்சத்தின்
வெளிச்சப் பிரகாரத்தினுள்
நுழைவதற்கு
கண்ணியமாய்க் கனவு
கண்டு கொண்டிருக்கிறது
கருவறைச்சிசு.
ஆதவன் அழகையும்
நிலவின் நேர்த்தியையும்
பூக்களின் புனிதத்தையும்
விழும் அருவியின் வீரத்தையும்
கண்டுணரும் ஆவலில்...
நியாயமானதும்
தேவையானதும் தான்.
பிரபஞ்சத்தில்
புள்ளியாய் விழுந்ததும்
வீறிட்டழுகிறது
அம்பலப் படுத்தும் அழுகையில்
அகப்பட்டிருக்கும் மனது
சிசுவிற்கு
பல கேள்விகளை முன் வைக்கிறது.
எண்ண ஓட்டத்தில்
நினைத்து மகிழ்ந்த எதுவொன்றையும்
நெருங்க விழையாமல்
உழல்கிறது காலச்சக்கரம்.
காத்திருத்தல் அவசியமென்றும்
அறிந்து கொள்ள நாளாகுமென்றும்
உணர்ந்து கொண்டது
இப்போது இந்தச் சிசு...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.