இனிய உதயம்
என்னிலிருந்து
ஒரு கைப்பிடியளவு
என்னை எடுத்து வைக்கிறேன்.
என்னெதிரிலிருக்கும்
நீங்கள் பதற்றப்படுகிறீர்கள்.
என்னை எடுத்ததில்
வலியோ ரணமோ ஏதுமில்லை
எனக்கு.
என்னைப்போல் நீங்களும்
ஒவ்வொருவராய் ஒரு கைப்பிடியளவு
எடுத்து வைக்கிறீர்கள்.
அப்போது
உங்களின் பதற்றம்
தொற்றிக் கொள்கிறது என்னில்.
ஒவ்வொருவரும்
ஒரு கைப்பிடியளவு எடுத்தது
மலைபோல் குவிந்திருக்கிறது.
அந்த மலைக்குவியலின்
இடுக்கிலிருந்து
ஓர் இனிய உதயம்
நமக்காக உதயமாகத் தொடங்குகிறது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.