சின்னச் சின்ன கவிதைகள்
ஆடு,
கவிதை போல் போட்டது;
ஒன்றின்கீழ் ஒன்றாக
புழுக்கை..!
*****
எலியின் தானியச் சுரங்கத்தில்
எதிர்பாராத் திருப்பம்;
சாரைப்பாம்பு..!
*****
எறும்பு ஊர்ந்துத் திரித்தக் கயிரை
எடுக்க முயன்று தோற்றுப் போனது;
அம்மணக் குழந்தை..!
*****
பற்ற வைத்த நெருப்பில்
கீச்சரங் குருவிகளிரண்டு
உடன் கட்டை ஏறுதல் தவிர்க்கப்பட்டது;
அந்தி மழை..!
*****
சிறுமி விட்ட கப்பல்
குழாய் தண்ணீர் எட்டிப் பார்க்காத
குட்டையில்;
தளும்பி நிற்கிறது..!
*****
கண்ணாடி பார்.
பூமி, பம்பரத்தை விட வேகமாக
சுழல்கிறது..!
- கி. கவியரசன், வீரணாமூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.