வாழுகிறோமா...? வசிக்கிறோமா...?

அந்தக் காலம்தான்
நன்றாக இருந்தது.
ஆரத்தி எடுக்க
போட்டி போட்ட
மதினிமார்கள் இருந்தார்கள்.
தாய்க்கு நிகராய்
காவல் காத்த
தாய்மாமன்கள் இருந்தார்கள்.
ஜரிகை குறைவான வேட்டி
வாங்கித் தந்ததற்காக
சண்டை போட்ட
பங்காளிகள் இருந்தார்கள்.
இழவு விழுந்த
வீடுகளில்
உறவினர்கள்
இடுகாடு வரை போனார்கள்.
அடுத்தடுத்து பெண்களுக்கு
திருமணம் செய்தும்,
மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கும்
பெண்கள் வந்தாலும்
அம்மாக்கள்
ஓய்வின்றி உழைத்தார்கள்.
ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும்
அப்பாவிற்கு
மன அழுத்தங்கள் இல்லை.
ஒரே சோப்பை
குடும்பம் முழுதும் உபயோகித்தும்
தோல் நோய்கள் வரவில்லை.
கண்டதை உண்டாலும்
செரித்தது.
தொலைக்காட்சி செய்திகளில்
உண்மை இருந்தது.
மின் விசிறி
இல்லாமல்
உறக்கம் வந்தது.
எங்கோ ஏதோ ஒரு மூலையில்
மருத்துவமனையும் ஹோட்டலும்
இருந்தன.
வெயிலாலும் மழையாலும்
பாதிப்பு இல்லை...
பிள்ளைப்பேறு செலவில்லாமல்
சுகமாய் இருந்தது.
கல்விக் கட்டணம்
இல்லாமல் கிடைத்தது...
மாணவர்கள் ஆசிரியரிடம்
அன்பாய் இருந்தார்கள்.
குடும்பத்தில் பெரிவர்களின்
உடையைப் போடத் தயங்கியதில்லை.
அப்பா சொன்னால்
அந்த வார்த்தை
மறுக்காமல் ஏற்கப்பட்டது.
பெண் பார்க்க வந்தவனைப்
பிடித்திருக்கிறது
என்று சொல்ல வெட்கப்பட்டோம்.
காவிரிக் கரையில்
பயமின்றி குளித்தோம்
ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது.
ஆண்கள் தான்
சைக்கிள் ஓட்டக்
கற்றுக் கொடுத்தார்கள்.
மிகச்சிறிய
வயதில் எல்லாம்
பால் பேதங்கள் தோன்றவில்லை.
மொத்தத்தில்
அப்போது
வாழ்ந்தோம்...
இப்பொழுது
வசிக்கிறோம்...
அவ்வளவே...
ஆமாம் தானே...?
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.