சொற்கள்
உன்னோடு
சேர்ந்து உண்பதற்காகவே
சட்டைப்பை நிறைய
சொற்களெடுத்து வந்தேன்.
வரும் வழியில்
பசியோடிருந்த புறாக்களுக்கு
கொஞ்சம் தூவினேன்.
பிறகு வேலிமேலர்ந்தபடி
கரைந்த காகங்களுக்கு
கொஞ்சம் வைத்தேன்.
என் கால்களைச் சுற்றிவந்த
நாய்க்குட்டிக்கு
நான்கைந்து கொடுத்தேன்.
கோயில் வாசலில்
கையேந்திக்கொண்டிருந்த
இருவருக்கும் தலைக்கு ஒன்றென
இரண்டு கொடுத்தேன்.
எல்லாம் போக
என் சட்டைப்பையில் மீதமிருப்பது
ஒரு சொல்.
நம்மிருவரின் பசிக்கும்
தற்போது சரிசமமாகிறது
அந்த ஒரு சொல்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.