பயம்
நடுநிசி கூத்து முடிந்து
எமன் வேடம்
கலைக்கப் படாமலே
திரும்பிக் கொண்டிருக்கிறான்
அவன்.
முறுக்குமீசையை மீறி
அடி வயிற்றில்
தீமூட்டி சூல் கொள்கிறது
பேய் பயம்.
தெருமண் சரசரக்க
வாய்ப் பிளந்தபடி கூடவே
வருகிறது
வைக்கோல் திணித்த
எருமை.
அட்டைக் கடாயுதமும்
பாசக்கயிறும் கையில்
வைத்துக்கொண்டு
எஞ்சிக் கிடக்கும்
தைரியத்தில் நடப்பதாய்
ஓடுகிறான்.
பூச்சாண்டியைக்
கண்டது போல் அவனை
வட்டமிட்டுக் குரைக்கிறது
நாய்கள்.
எவரோடும்
பிணக்கில்லை என்ற போதிலும்
பேய் பயம்
எமனையும் விடாது
துரத்தும் என்றுணர்ந்தான்
அவனன்று.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.