கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன்
முன்பு போல்
சரியாகப் பசிப்பதில்லை
சரிவரச் செரிமானமுமில்லை.
சாப்பிட வாழ்ந்த காலங்கள்
மலையேறிப் போக
வாழ்வதற்காகச் சாப்பிட
வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டிருக்கிறது உடல்.
எதையும் இலகுவாக ஏற்க
முடியவில்லை.
பழைய நினைவுகளே
நெஞ்சில் அதிகம் உழல்கிறது.
காலஞ்சென்ற
உறவுகளைப் பற்றியே
எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறேன்.
சாதாரண இழப்பைக் கூட
ஏற்கவியலாமல் தள்ளாடுகிறேன்.
துரோகமற்ற ஒன்றினை
என் பார்வையில்
துரோகமென்று பிதற்றுகிறேன்.
எனக்குத் தேவையற்றது
எனத் தெரிந்தும் அதற்காகக்
கூச்சலிடுகிறேன்.
தொடர்பற்ற ஒன்றில்
வலிய மூக்கை நுழைத்து
நுழைந்த வேகத்தில்
பின்னுக்குத் தள்ளப்படுகிறேன்.
பாரபட்சமின்றி
கண்டதெற்கெல்லாம்
கண்ணீர் சிந்துகிறேன்.
செவி வழிச் செய்தியில்
யாரோ யாருக்கோ இழைத்த
கொடுமைக்கு நானிங்கு
அழுது தீர்க்கிறேன்.
இப்போது கூட
என் பரிதாப நிலை
எண்ணி வருந்தும்
உங்களுக்காகச் சிறுபிள்ளையாய்
நான் கண்ணீர் சிந்திக்
கொண்டிருக்கிறேன்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.