இன்று ஏனோ...? நினைத்துப் பார்க்கிறேன்...!
என்னை நேசித்தவன் என்னை வாசித்தவன்
இன்று ஏனோ? காணாமல் போகிறான்...
உனக்காகப் பிறந்தவன் என்றவன்
இன்று ஏனோ? சொல்லாமல் செல்கிறான்...
பயணத்தில் நிழலாக வருவேன் என்றவன்
இன்று ஏனோ? உடன் வர மறுக்கிறான்...
உன் விருப்பமே என் விருப்பம் என்றவன்
இன்று ஏனோ? விருப்பத்தை விற்கச் சொல்கிறான்...
என் உயிர் நீ தானடி என்றவன்
இன்று ஏனோ? என் உயிரை வாங்காதே என்கிறான்...
நீ அழுதால் என் ஆயுள் குறையும் என்றவன்
இன்று ஏனோ? என்னை அழ வைக்கிறான்...
பேசிக்கொண்டே இரு என்றவன்
இன்று ஏனோ? வாயை மூடு என்று சாடுகிறான்...
உன் வலி என் வலி என்றவன்
இன்று ஏனோ? உள்ளம் நோகும் வலியைத் தருகிறான்...
தன்மானத்தை எதற்காகவும் இழக்காதே என்றவன்
இன்று ஏனோ? தன்மானத்தைத் தவிடு பொடியாக்குகிறான்...
திருமணத்திற்கு முன் நீ பேசியதை
நினைத்துப் பார்க்கிறேன்...
மணிவிழாக் கொண்டாட்டத்தில்
மண்ணில் புதைந்த காதல்,
மறுபிரவேசம் செய்கிறது
மடியில் உறங்கும் பேரப்பிள்ளைகளுக்காக...!
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.