காலம் மாறிப் போச்சு!
வருடமெல்லாம் படித்து
வாடிக் களைத்த பிள்ளை
புத்துணர்வு பெறுவதற்காய்
முன்னோர்கள் சொன்ன வழி
கோடை விடுமுறைதான்!
தூரத்திலுள்ள உறவுகளை
நெருக்கமாய் விசாரித்து
ஒட்டி உறவாட இருந்த
உன்னதமான ஒருவழி அது!
பரிட்சை முடிந்து விட்டால்
பயணம் பாட்டி வீடுதான்
பாட்டி வீட்டை மட்டுமல்ல
பக்கத்து உறவையெல்லாம்
பாசமாய்க் கண்ட காலமது!
அறிவியல் வளர்ந்து போச்சு
அறிவுத் தேவை அதிகமாச்சு
அதிகாலை யோகாசனம்
அடுத்து கராத்தே சிலம்பம்
பத்து மணிக்கு தனிப்பயிற்சி
மதியம் திரும்பி வந்தால்
மாலை வரை கணினிப் பயிற்சி
இரவு உணவுக்கு முன்னே
இசைப் பயிற்சி
இது போக, இன்னும் பல பயிற்சிகள்
மூச்சு விட நேரமில்லை
முடியுமா பாட்டி வீடு போக
உறவு மறந்து போச்சு
இயந்திர வாழ்க்கையாச்சு
கோடைகாலம் கொடுமையாச்சு
யாரை இங்கு குறை சொல்ல
காலம் மாறிப் போச்சு!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.