அப்துல் கலாம் நினைவு நாள்!
அறிவின் சிகரமென
அன்பின் ஊற்றென
அகிலத்தில். நட்சத்திரமாய்
அப்துல் கலாம் ஐயா
தமிழ்நாடெனும் ஆழியில்
தனிமுத்தாய் விளைந்தவர்
தாய்நாட்டின் பெருமைதனை
தரணியெங்கும் பரப்பியவர்
விடியலுக்காய் ஏங்குவோரின்
வாழ்க்கையிலே ஓர்
விளக்கென ஒளியீந்து
விண்ணுயர்ந்து காட்டியவர்
வசதியாய் வாழ்வோரே
வாழ்வினிலே உயர்ந்திடுவார்
வழக்கமதனை மாற்றியொரு
வெற்றிவாகை சூடியவர்
வறுமையிலே தவித்தாலும்
வற்றாத இலட்சியத்தோடு
வலிமையாகப் பாடுபட்டால்
வந்துவிடும் வெற்றியென்றார்
தலைமுறையினர வளமாக்க
தந்திட்டார் அறிவுரைகள்
விழிமூடாக் கனவுகளே
விலையற்ற இலட்சியங்களென்றார்
அறிவுதீபமாய் அகிலமெல்லாம்
அப்துல் கலாம் ஜயா
அணையா ஒளியேற்றி
அமரராகிய தினமிது
எங்கே பிறக்கிறோமென்பதல்ல
எந்த இலட்சியத்தை
எப்படிக் கொண்டுள்ளோம்
என்பதே முக்கியமென்றார்
குரானைத் தொழுதிட்டார்
கீதையைப் புரிந்திட்டார்
விவிலியத்தை அறிந்திட்டார்
விவேகத்திற்கு சலாம் ஐயா
அகவைகள் ஒன்பதின்று
அணையா ஜோதியாகிய
அப்துல் கலாம் ஐயா நினைவு நாளில்
அவர் பாதம் பணிந்திடுவோம்!
- சக்தி சக்திதாசன், லண்டன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.