இவ்வாறாகிய வாழ்க்கையால்...!
பசியாற்றிய
உணவில்
நேற்று
துள்ளிளோடிய
கிடாயின்
நினைவுகளில்லை
கத்தும்
வெள்ளாட்டிற்குள்
வளர்ந்து வரும்
அதன்
ஆதர்ஷ
மீதங்களைத் தவிர.
பாத்திரத்தில்
ஒட்டியவைகள்
எவைகளின்
உணவானதெனத் தெரியாது
கழுவிய நீரோடு
கடந்து போனதால்.
பரிணாமம் கண்ட
கொசுக்கள்
மின்விசிறிக்கு
பழகி இருந்தது
பறந்து வந்து
பக்குவமாக உணவெடுக்க.
அரித்துச் சொறிந்த
தடித்த அடையாளங்கள்.
தட்டியோய்ந்த கைகள்
தழுவிய தூக்கத்தில்
நான்
உணவாகியதால்
விளைந்தது.
கொசுப் பத்தியைக்
கொளுத்தாமல்
இழுத்துப் போர்த்திப்
படுக்கும்
நான்.
இயற்கைச் சமன்பாட்டில்
இணங்கியே
இரக்கம் கொண்டதாக
எண்ண வேண்டாம்.
வத்திப்பெட்டி
வாங்கக் கூட
வக்கற்று
வறண்டு போனதாலும்
இருக்கலாம்.
வாய்த்திருக்கும்
வாஞ்சையுடை
இத்தருணம்.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.