எல்லாம் வல்ல...!
மலைகளைத் தீட்டி
மகிழ்ந்த நீ
மரங்களைத் தீட்ட
மறந்து விட்டாய்.
மரங்கள் சிலவற்றை
நான் வரைந்து
முடிக்கையில்
இப்போது
கானகமாய்க் காட்சிப்படுகிறது
ஓவியம்.
கானகம் வந்ததும்
நம் உத்தரவின்றி
மேலே வந்து விட்டது வானம்.
உடன்
கதிரவனும்
கருமுகில் கூட்டங்களும்
வரத்தொடங்கின.
சில்லென்ற காற்று
இதமாய் வீசியதும்
மழை
பொழியத் தொடங்குகிறது
வானம்.
அருவிகள்
ஆறுகள்
பறவைகள்
விலங்குகளென
இன்னபிறவெல்லாம்
அழகாய் வரைந்து
முடிக்கிறோம்.
இறுதி பாக்கியாய்
எல்லாம் வல்ல
மனிதனை
நம்மை நாமே
நாம் தீட்டி முடிக்கிறோம்.
ஆரவாரத்துடன்
இயற்கை எழிலோடிருந்த
கானகம்
அக்கணம் முதற்கொண்டு
தன் பொலிவை இழந்து
மெல்ல மெல்ல
அழியத் தொடங்குகிறது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.