சொல்ல முடியாத தவிப்பு.
இரண்டு பேரின்
தோள் மீது கைபோட்டு
வெளிவந்த
ஆட்டோ ஓட்டுனரின் மேல்
தனி அபிப்பிராயம் இருந்தது
காலையிலையே
அரசின் மது, குடி
கடையிலிருந்து
வெளிவரும் வரை.
பிள்ளைகளின்
பால்ய பிராயத்தில்
அவர்தான் பள்ளிக்கு
அழைத்து செல்லும்
நம்பிக்கையான
ஆட்டோ ஓட்டுநர்.
பிறகான வருடங்களில்
அவர் ஆட்டோக்கள்
பல வாங்கியது
அவரின் உழைப்பின்
வெகுமதி.
அதற்கான
ஆரம்பப் புள்ளி
நான் தானென
பலர் மத்தியில் சொல்வார்
தொழிலைக் கற்றுக் கொடுத்த
முதலாளியெனவும்.
கடந்த ஆண்டில் மகன்
வெளிநாடு சென்று விட்டதாகவும்
தகவல் கிடைத்தது
எனக்கு.
வசதியின் வாளிப்பு
மெருகேறும்
இவ்வேளையில்
யாவருமே
குடித்தழிவதுதான்
இலக்காவென
தெரியவில்லை
எப்பொழுதும்.
இனி அவரைக்
கடக்கும் பொழுது
இதை எச்சரித்துவிட
எத்தனிக்கும்
என்னிடமிருந்து
தப்பிக்க
அலுவலகம் செல்லும்
வழியை மாற்றிவிட்டேன்
ஒரு வசதிக்காக.
இவர் மனைவி
நோயுற்றுப் படுக்காமல்
இருந்தால்
ஒரு வேளை
யாவும்
மாறி இருக்கலாம்
அவரின் சிதையாத
கண்ணியம் கூட.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.