தாழாத் துயர்
கிளர்ந்தடங்கும்
உணர்வை
யாது சொல்வது
கேலிகளின்
வலிகளுக்கு இடையான
கசியும் இரணப் போக்கில்.
சேலையின்
சௌகரியத்தில்
புகுந்தடங்கிய
பொழுது
வெட்கத்தலங்கள்
மறைந்த பூரிப்பில்
பற்றவொரு
தோதான
ஏற்பாடானது.
ஈட்டிப் பார்வைகளின்
நோதலில்
கன்னிய உடல்
நளின நடையாக
வெட்கம் தொலைத்த
துயரமென
போக்கிடமற்று
கடினப்பட்டது.
தவப்பாடின் வெகுமதியல்ல
இவ்வுடலென
உணரவில்லை
உகந்ததாகாத
உலகில்
ஒரு பொழுதும்
எவரும்.
விரும்பி ஒதுக்கிய வீடு.
வெறுத்து விரட்டிய
உறவுகள்
யாவும்
கழிப்பிடத் துயர
வாழ்வில் கைகள் கட்டி
வேடிக்கை பார்த்தது.
வஞ்சிக்கப்பட்டதான
பொழுதின்
இயலாமையில்
வாய்க்காது போன
ஆதுர தோல்கள்
இருளுக்குள் மொய்க்கும்
ஏளன அவலங்களாகக்
கிடத்தியது.
கையுழைப்பில்
கையேந்திப்
பசியாறும் பாடுகளில்
படிக்க வைக்கும்
சாயலொத்த
சிறார்கள்தான்
அணுப் பிழை
அர்த்தனாரி மெய்களின்
வெறுப்புகளில்
வெந்து தணிவதை
அர்த்தப்படுத்துகிறார்கள்.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.