இன்புறவு
இலலிதம் பொழியும் இலஞ்சிப் பூக்களின்
இதழ்களில் தேங்கியிருந்த
சோபையைக் களவாடியது யார்?
பட்டுப் போன்ற அவள் படகு
கருத்த அலைகளில்
நெளிந்து நெளிந்து தப்பிக்கிறது
அரவம் போல
எனக்கேயுரிய வனக்கோசரத்தில்
என் மகிழம் பூக்கள்
சோபமிழந்து சோகையாய்...
என் இதயத்தைப் புரட்டிப்போட்ட உக்கிரம்
இன்னும் ஆழங்கால்பட்டு...
சாகசமற்ற அல் ஏனோ நீள்கிறது
மணப்பெண்ணின் தொங்கலான ஆடையைப்போல!
எல்வளியில் சிதறிய கூடாரத்தைக் கடந்து
பூவரச இலைகளின் சலசலப்பில்
நான் பாட வந்ததை முணுமுணுக்கிறேன்
என்ன நினைத்தாளோ தெரியவில்லை
ஒரே ஒரு பொன்மலர் மட்டும்
அவள் மந்தகாசத்தில் பூத்துக் குலுங்குகிறது
ஒரே ஒரு இறகை விட்டுச் சென்ற செம்போத்து போல!
எரியும் சுடர் இன்னும் தீய்ந்து போகவில்லை!
மரணிக்கிறவனுக்கு வாழ்வு ஒரு பற்றுக்கோல்தானே
அந்த ஒரே ஒரு அடையாளம் போதும்
எவ்வம் தணிந்து எனக்குள்ளே
உருகும் பனிக்கட்டியின் ஈரம்
மீண்டும் அந்தப் புறா என் அகண்ட தெப்பத்தில்
வறுநகையில் சயனித்து இன்புறப் பறந்து வரும்
பரிமளம் பரப்பும் காதலின் மறுரூபமாய் அவள்!
- சந்திரா மனோகரன், செங்கோடம்பாலயம், ஈரோடு.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.