முதியோர் உள்ளம்
நெருடும்
அசௌகரியத் துயரில்
சமாளிக்கத் தெரியாத
கோழைகளால்
நிரம்பிக் இருக்கிறது
உதிரும் பழங்கள்
வானை நோக்கி.
சுயாதீனச் சுவைகளில்
மெருகேறி இருந்தது
ஒவ்வொன்றும்
ருசிக்கப் பிடிக்காத
மூடர்களின் பாத்தியத்தில்
பெயருக்கு வாடகை பெற்று.
சுவாசச் சிக்கலிலும்
சொற்கள் உருள்கிறது
மந்திர உச்சாடனத்தில்
தலைமுறை தலைத்தோங்கும்
பிரார்த்தனைகளால்
தாழாத பொழுதிலும்.
நியாய கற்பிதங்கள்
போர்த்திய நெஞ்சங்கள்
பிடிபடாத கருணையால்
செயற்கை ஒழுங்கில்
சிறக்கிறது.
சுழலும் வாழ்வின்
சூட்சுமம் மறந்து
அன்றாடங்களில்
அனுபவப் புரிதலற்று.
ஏக்கத்தில்
எங்கோ
அழுகி
அப்புறப்படுத்தப்பட்ட
பழத்திலொன்றைத்தான்
பால் தெளித்து
பல காரியங்கள்
செய்து
பிறவிப் பயன்
பெற்று விட
நினைக்கிறது
பிள்ளைகள்
ஊரையும்
உறவுகளையும்
அழைத்துப்
புதிய வழிகளில்...
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.