இதுவுமொரு மொழி!
பாதம் வருடும்
பூமியறியும்
தாழப் பார்த்து
நடப்பதை என்னைப் போலெப்போதும்.
செய்திகள் சொல்லும்
சிமிட்டும் இமைகள்
சிறகசைக்கும்
சிறு சிட்டாக.
பற்றி எரியும்
பார்வையொன்றில்
இதயம்
மெழுகாக.
பரிவாக தழுவும்
பறக்க வைத்து
கண நேர தரிசனமென்றாலும்.
இதயம் கூட
எகிறித்துடிக்கும்
கண்ணூட்டம்
தாங்காது.
மனதை நிறுத்தும்
மாயம் செய்யும்
காணும் பொழுதெல்லாம்
கிரக்கம் மேவ...
விழிகள் பேசும்
வித்தைகள் கற்றபின்
மொழிகளெதற்கு
முள் மீது நடப்பதற்கு.
வியாபிக்கும்
மௌனம் போதும்
வாழ்வெல்லாம்
நாம் இன்பம்
துய்ப்பதற்கு...!
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.