இதுவுமொரு மொழி!
மழையில் நனையும் குடை
மழையின் ஈரத்தை ரசிப்பதில்லை!
கோப்பையில் நிரம்பிய நீர்
சமயங்களில் கோப்பையை உடைக்க முயன்று
தோற்றுப் போகின்றன!
எல்லாக் காம்புகளும் பூவின் மென்மையை
ஆராதிக்கும் என்ற நிச்சயமில்லை!
மீனின் சுயகௌரவம் பட்டாம்பூச்சியோடு
ஒப்பிடப்படும் போது காயப்படுகின்றது!
கைவிலங்குகள் எல்லாம் வளையல்கள் என்றே
மொழிபெயர்க்கப்படுவதால்
மூலத்தின் பொருள் உணர்ந்து – அதை
உடைத்தெறிய பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன!
இனி வரும் தலைமுறைக்கு பானையை விட,
பானை செய்யும் வித்தையைக் கற்றுக்
கொடுப்பதேச் சிறப்பு!
- முனைவர் விஸ்வலிங்கம் தேன்மொழி, சிங்கப்பூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.