நீறு பூத்த நெருப்பு!
நிலா உடைந்த கிணற்று நீரென
நினைவலைகள் உடைந்து உடைந்து சேர்கின்றன.
உன்னில் பதியம் போட்ட வாழ்க்கை
உணர்தலின் ஆழத்தில் முளைத்து,
அணைப்பின் கதகதப்பில் நீறு பூத்த நெருப்பென
அணையாமல் கிடக்கின்றது.
காமத்தின் தீண்டல்களெல்லாம் அன்பின்
வன்தொடர் எனவே உணர்த்தியது – ஆற்றில்
விழுந்த இலையின் போக்கெனச் செல்லும்
உன் வாழ்வின் நகர்தல்.
ஒட்டகங்களின் உறைவிடத்தில் கூட
மருதம் மலருமென – எப்போதும்
என்னை நிறைத்திருந்த வெறுமை
உணர்த்தியதில்லை.
நடந்தவைகளை மீட்டெடுத்து
பௌர்ணமிக் கிரணங்கள் வழிந்தோடும்
இரவில் மீண்டும் கதைப்போம் வா!
- முனைவர் விஸ்வலிங்கம் தேன்மொழி, சிங்கப்பூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.