தமிழனின் சிறப்பு
இனிய வார்த்தை!
எளியசொல்!
நிறைந்த உழைப்பு!
விரைந்த செயல்!
வந்தாரை உபசரித்து
உணவிட்டு வாழ்விற்கு இடமிட்டு......
இந்தா............
இன்னும் வேண்டுமா?
ஏதும் தேவையா?
எனக்கேட்கும் மனம்!
தமிழ் மாந்தரின் இயல்பு!
குணம் என்னும் குன்றில் ஏறி நின்று
தினமும் உயரும் தெய்வமாந்தர்!
அவர்களில் அள்ளிக்கொடுப்பவன் வள்ளல்!
கிள்ளிக்கொடுப்பவன் ஏழை!
இன்னா செய்வோருக்கும்
இனியதைச் செய்
என்பதிவன் இலக்கணம்! இலக்கியம்!
இது பொய்யல்ல
புடமிட்ட தங்கம் போன்ற மெய்!
கோவில்களைப் பாருங்கள்!
கலைக்கோபுரத்தை நோக்குங்கள்!
மேகங்களை உறவாக்கும்! மெல்லப்பேசும்!
ஔவைக்கு நெல்லியும்
முல்லைக்குத் தேரும்
புள்ளுக்குச் சதையும்
புள்ளியிட்ட மயிலுக்குப் போர்வையும்
பசுவுக்காகக் கன்றைக் கொன்ற பண்பட்ட மன்னர்
பகலவனாய் இருந்தநோக்கு!
காட்டு வள்ளியைக்
கடவுளே மணந்த உண்மை!
வேறு எந்த நாட்டிலுண்டு?
நம்பு!
நெற்றிக்கண் திறந்தபோதும் நில்லடா
உன்பாட்டுக் குற்றமடா என்று கூறி
மறுத்து எரிந்த கதை
கதையா?
காவியமா?
இல்லை பொய்யா?
புனைந்துரை செய்ததா?
உண்மை! உண்மை!
இது வெறும் புகழ்ச்சி இல்லை!
இன்றும் இருக்கிறது!
பொற்றாமரைக் குளம்!
இடமுலை திருகி எடுத்து எறிந்து
எரித்த கண்ணகி வாழ்ந்த நாடு!
ஒவ்வொரு எழுத்தும்
உயர்ந்த மந்திரம்!
மண்ணும் மலையும்
மாந்தரின் தெய்வம்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உண்மைப் பண்பாட்டை
மண்ணில் கூறி வாழ்ந்து
காட்டியவன் தமிழன்!
நெஞ்சில் வேலேந்தி
நிமிர்ந்து போராடும்
அஞ்சா வீரம்
அவனியில் வேறெங்கு உண்டு?
மானம் தமிழனின் மூச்சு!
மரியாதை இவனது செல்வம்!
யாவிலும் உயர்ந்த நல்லவன் தமிழன்!
-முனைவர். மா. தியாகராசன், சிங்கப்பூர்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.