மலரும் காலை...!

புலர்கிறது பொழுது
புதுப் பொலிவுடன்...
கீழ் வானின் அடிவயிறு
வாhp வழங்கும்
வண்ணக் கலவை
ஒளி வெள்ளம்...
ஆதவன் ஒளியால்
நுனிப் புல் பனித்துளிகள்
விடை பெறும் விந்தை...
ஓசையின்றி
மெல்லத் திறக்கும்
மொட்டுகளின்
இதழ் கதவுகள்...
அழைக்கும் வீடாய் மலர்கள்
அதில்
மது குடிக்கக் காத்திருக்கும்
வண்டுகள்...
தடாகத்து
தண்ணீர் மேல்
தலை நீட்டும்
தாமரை மொட்டுக்கள்..
தாமரை இலையில்
தத்தித் தத்தி
சோம்பல் முறிக்கும்
தவளை...
உடல் மறைத்து
தலை தெரிய
ஊமையாயிருக்கும்
தண்ணீர்ப் பாம்பு...
வட்டமடித்து
சுற்றித் திரியும்
தும்பிக் கூட்டம்...
காய்ந்த குச்சியொன்றில்
கண் இமைக்காது
காத்திருக்கும்
மீன் கொத்தி...
கரையோரம்
கால்களால் கிளறி
நத்தை பொறுக்கும்
காணான் கோழி...
சற்றே தொலைவில்
சல சலக்கும்
தென்னங் கீற்று...
கதிரவன் வரவால்
கலைந்து நிற்கும்
மேகத்திரள்,
அதைக்
கடத்திச் செல்லும்
இளந் தென்றல்
நீர்ப் பரப்பில்
கால் பதித்து
நடனமாடி
கோலம் போடும்
தண்ணீர்ப்பூச்சி...
தும்பி தொட்டதால்
நாணித் தலை சாய்க்கும்
நாணல்...
கூட்டமாய் காகம்
கரைந்து கொண்டே
கரை கடக்கும் காட்சி...
தடாகத்தில்
தவறி விழுந்த
கட்டெறும்பு
தாவித் தாவி
இலைப் படகில் ஏற
இயல்பாய் எடுக்கும்
இனிய முயற்சி...
பறக்கும் போது
தண்ணீhpல் சிதறிய
பறவையின் எச்சம்
பசிபோக்கும் உணவாய்
மச்சங்களுக்கு...
பொழுது புலர்ந்தது
புதுப் பொலிவுடன்..!
-பாளை.சுசி

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.