முதிர்கன்னி
வாசல் வரை
வந்த வரன்களை
வந்த வழியே
வழியனுப்பி வைத்தனர்..!
தந்தை
தனக்கு
மருமகன் தேடினார்
கிடைக்கவில்லை..!
தாய்
தனக்கு
மருமகள் தேடினாள்
கிடைக்கவில்லை..!
தமயன்
தனக்கு
மைத்துனன் தேடினான்
கிடைக்கவில்லை..!
தமக்கை
தனக்கு
கொளுந்தன் தேடினாள்
கிடைக்கவில்லை..!
யாருமே
பெண்ணுக்கு
மணமகன் தேடவில்லை.
அவளாய்த் தேடவும்
அனுமதிக்கவில்லை...
அவளோ,
முடிவு எதுவும் தொpயாமல்
மோட்டு வளையை
முறைத்துப் பார்ப்பதும்
கட்டிலில் படுத்து
கனவு காண்பதுமாய்
முடி வெளுப்பதையும்,
முகம் சுருங்குவதையும்
காலை தோறும்
கண்ணாடியில் கண்டு
கலங்கும் கண்களில்
கசியும் உப்பு நீரை
கையினால் நீவி விட்டு,
உடைந்த உள்ளத்தில்
உதிக்கும் உணர்வுகளை
ஒற்றைப் பெருமூச்சில்
ஊமையாக்குகிறாள் -
அவள் ஓரு முதிர்கன்னி..!
- பாளை. சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.