வசைபோய் வாழ்ந்தவன்!
தேரா மன்னா! தேரா மன்னா!
ஓரா தொருசொல் உரைத்ததோ உன்நா?
கொல்லன் உரைத்ததைக் கொண்டத னாலே
கொல்லத் துணிந்ததோ கோவுன்செங் கோலே!
காதில் விழுந்த களவுச் செய்தியால்
கோதில் ஒருவனைக் கொன்றது முறையா?
அழைத்தா ராயா தவன்தலை கொய்து
பிழைத்தாய் பெரும்பிழை இழைத்தா யன்றோ?
குற்றம் புரிந்ததாய்க் கூறக் கேட்டநீ
சற்றும் ஆய தளைப்பட் டனையோ?
முற்றும் உணரா மொழியுரைத் தனையே!
குற்றம் புரியான் கொலையுண் டனனே!
பாம்பின் நஞ்சைப் பற்றி யெடுத்துப்
பாம்பிடம் விற்கப் பறப்பா ருண்டா?
திருடிய பொருளைத் திருடிய பொழுதிற்
திருடிய இடத்தில் சென்றுவிற் பவர்யார்?
திருட்டுப் பொருளைச் சென்றுகா சாக்க
இருட்டுப் பொழுதே ஏற்றது மன்றோ?
கொற்றவள் சிலம்பைக் கொல்லை கொண்டவன்
விற்றிட வீதியில் விரைந்திடு வானா?
தப்பைப் புரிந்தவன் தனைமறைக் காது
தொப்பை தெரிய உலவிய துண்டா?
கறந்த பாலைக் காக்க கன்றினைச்
சிறந்த காவலாய்த் தேர்ந்திடும் செயல்போல்
பழுது பட்ட பாழ்மனத் தானிடம்
பழுது பார்க்கக் காற்சிலம் பீந்தனை!
நெஞ்சில் கரவை நிறைத்து வைத்தவன்
வஞ்சம் புரிந்தான் வழுவின் வழிசென்றான்!
ஒற்றைச் சிலம்பை ஒளித்தா னெனினும்
மற்றைச் சிலம்பை மறைத்தா னில்லை!
தற்செய லாக தன்சிலம் பெடுத்து
விற்கவந் தவன்மேல் வீண்பழி யுரைத்தான்!
உரைத்த பழியின் உண்மை யுணரா
திறைத்தாய் கடுஞ்சொ லிறந்தான் நல்லோன்!
பொற்கொல் லன்தன் பொல்லாப் பழியால்
நிற்குந் தலைபோய் நில்லா தொழிந்தனன்!
காவலன் உன்னிணையாள் காற்சிலம் பெடுத்தவன்
கோவலன் என்றா குறித்தனை? அய்யோ!
தகாத சொல்லால் தலைபோய் வீழ்ந்தான்
புகாரின் தோன்றல்; புகழ்செய லிதுவா?
குற்றம் புரிந்ததாய்க் கொள்ளினும் ஆளும்
கொற்றவா! அவையைக் கூட்டியவ் விருவரை
நயன்மை மன்றில் நிறுத்திய துண்டா?
அயலவன் அவனை அழித்தது நன்றா?
அறிவில் செறிந்தோ ரவையில் இருக்க
நெறியின் வழியில் நின்றி டாமல்
அரசன் என்னுஞ் செருக்கா லன்றோ
உரசிப் பார்த்தாய்? உயிர்கொலை செய்தாய்!
உண்மை அறியு முள்ள மில்லாய்!
அண்மித் தழிவி லகப்பட் டாயே!
எண்ணித் துணிந்தா யில்லை; உன்னிரு
கண்ணால் கண்டனை யில்லை; காதால்
கேட்டதை மெய்யெனக் கொண்டத னாலே
மாட்சி இழந்தாய்! மனம்மிக நொந்தாய்!
ஏதிலி யாகி இறந்து கிடந்தவன்
காதலி வந்தாள்; காற்சிலம் பெடுத்தாள்;
நயன்மை கேட்டு நடந்தா ளவையோர்
வியக்கு முரையை விரித்தாள் வீசி
எறிந்த சிலம்பி லிந்த பரல்கள்
தெறித்தன; சாட்சிகள் செப்பின; அந்தக்
காட்சியைக் கண்ட காவலா! உன்றன்
பேச்சினை இழந்தாய்; பேருருக ணுற்றாய்;
‘யானே கள்வன்!’ எனுமுரை செய்து
போனாய்; விண்ணகம் போந்தத னாலே
இசையிற் சிறந்த இறைவா!
வசைபோய் வாழ்ந்தாய் மண்ணுல கினிலே!
- அகரம் அமுதா
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.