காதல் மயக்கம்
வா!இப்படிஎன் வஞ்சிக் கொடியே
வாரி அணைக்கின்றேன்
தா!இப் படிஉன் தங்க உடலைத்
தழுவிக் களிக்கின்றேன்
நீஇப் படிஉன் நாணம் காட்டி
நிற்பது கூடாதே
பூஎப் படிதன் பூமுகம் மூடினும்
பொன்னளி கூடாதோ!
நெஞ்சில் நெஞ்சை நேராய்த் தைத்து
நித்திரை கொள்வோமா?
பஞ்சில் தீயைப் பற்ற வைத்துப்
பார்த்துக் களிப்போமா?
அஞ்சி அஞ்சி அகல்வது மேனோ
அருகில் வாராயா?
மிஞ்சும் காதல் மிருகம டக்கி
வெற்றியைத் தாராயா?
ஓரக் கண்ணால் ஒளிந்து பார்த்தே
உள்ளம் களிக்கின்றாய்!
ஆறத் தழுவுதல் ஆகா தென்றோ
அப்புறம் ஒளிகின்றாய்?
ஈர நெஞ்சில் எழுந்த காதல்
எரியும் தழலாகும்
நீரைக் கொண்டு நெருப்பணைப் பதுபோல்
நீவரல் முறையாகும்!
இதழின் தேனைப் பருகத் துடித்தும்
இவன்நிலை காணாயா?
குதலை மொழியாற் கொஞ்சும் கிளியே!
கூடிட வாராயா?
இதமாய் நெஞ்சில் இடியும் இறங்க
இயலா துழல்கின்றேன்
பதமாய் உன்னைப் பருகி முடிக்கப்
பாயில் புரள்கின்றேன்!
பஞ்சைத் தீட்டிப் பகைவரை ஒடுக்கப்
பாயும் நிலைபோலே
நெஞ்சைத் தீட்டி நேரெதிர்ப் பவளே!
நெஞ்சம் இறங்காயா?
மஞ்சம் கொண்ட மடிப்பு குலைய
மற்போர் புரிவோமா?
மிஞ்சும் இன்பம் இருமடங் காக
மீண்டும் முயல்வோமா?
- அகரம் அமுதா
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.