புரியவில்லையா...?
அன்பே...
உன்னை எண்ணி
எழுத நினைத்தால்
பலனற்றுப் போகின்றன
எழுத்துக்கள்...!
வலுவிழந்து விடுகின்றன
வார்த்தைகள்...!
குறைமாதக் குழந்தையாய்
முற்றுப் பெறாமல்
முழிக்கின்றன
வாக்கியங்கள்...!
மொத்தத்தில் நான்
பூஜ்யமாகிறேன்..!
மீண்டும்
பூஜ்யத்தின் துவக்கத்தில்
பேனா முனை
பிசிறடிக்கிறது...!
என்ன எழுதுவது?
எதை எழுதுவது?
கடந்த காலமா...?
அது
முடிந்து போன கதை...!
வேண்டும் போது
புத்தகத்தைப் புரட்டி
நினைவு படுத்திக் கொள்ளலாம்..!
எதிர் காலமா...?
அது
எதுவுமே எழுதப்படாத
வெள்ளைக் காகிதம்...!
அதில்
இறைவன் எழுதப் போவதை
யாருமே அறியார்...!
நிகழ் காலமா...?
ஓ! இது...!
நிலையில்லா
நீர் ஆடி...இதில்
தெரியும் பிம்பம்
கலைந்து போகிறது...
தோன்றும் பிம்பம்
தொலைந்து போகிறது...
அலை அலையாய்
எண்ணங்கள்
கரை மோதுவதும்
உட் செல்வதுமாய்
நிலையில்லா வாழ்க்கையை
நினைவு படுத்துகிறது..!
புரியாத உலகில்
புரிந்ததாய்
வாழ்க்கையைப்
புரியாமலே
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!
ஏன்...?
புரியவில்லையா...?
- பாளை.சுசி, பாளையங்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.