புத்தாண்டே வருக….!

அண்டமெங்குமே கொண்டாட்டம்
இன்று
பூமி புதிதாய் சுற்றத் தொடங்குதே…
அழகான சிறகு முளைத்து
உலகு பறக்குதே
கலைப் பண்டமாய்…
எங்கும் மழை
இனிதாய்ப் பொழிய
மேகக் கூட்டங்கள்
பரவிட வேண்டும்…
ஆறுகள் நிரம்பியெங்கும்
அளவாய்ப் பாய
பூமித் தாய் சிரிக்கும்
குதூகலமாக..
உள்ளங்கள் இனி
மகிழட்டும்…
இதயங்கள் இனிதாகத்
துடிக்கட்டும்…
தென்றல் வீசிடும்
அலைகள் எழும்பிடும்
இயற்கையெல்லாம் நன்றாய்க்
கவி சொல்லிடுமே…
பூமி புதிதாய்
சுழலத் தொடங்குதே
எம் கவலை மெதுவாய்
விலகி அடங்குதே…
அழகிய பூவாய்
அண்டத்திலே பூப்பாயோ..
இவ்வுலகே ஒரு
கலைப் பண்டமாகட்டும்…
துண்டுதுண்டாகிய
உள்ளங்களெல்லாம்
ஒன்றாய் சேரட்டும்...
நிலவு வந்து சிரிக்கட்டும்
நீரலைகள் பாடட்டும்
நினைப்பதெல்லாம் நலமாக
இனி எப்பொழுதும் ஆகட்டும்…
அழுத கண்ணீர் காயமுதல்
இடிவந்து வீழ்ந்ததெல்லாம்
கடல் நீரில் கரைந்து போகும்
சிறு பனித்துண்டு ஆகட்டுமே…
காண்பதெல்லாம் சுகமாக
ஆயுள் வரை தொடர வேண்டும்…
கனிவாக வாழ்த்துப்பா
நீ இசைக்கின்றாய்,
கேட்கின்றதே…!
உண்மையென்ற அச்சு கொண்டு
உலகு இனி சுழல வேண்டும்
நியாயங்கள் பெருகியெங்கும்
நீதி நிலைத்திட வேண்டும்…
உண்மை பேசிடும்
உதட்டைப் பெறுங்கள் -
நன்மை செய்திடும்
“கரங்கள்” ஆகுங்கள் -
இதயம் சிறந்திட
சிந்தை செய்யுங்கள் -
சாதிபேதங்கள் இனியும் வேண்டாம்
நீதி கொண்டே எதையும்
சாதியுங்கள் -
சாந்தமாகவே சுற்றும் பூமி
இனி நாளைய சரித்திரங்கள்
சொல்லும் மீதி…!
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.