என்றாவது ஒருநாள்
ஆழ் கடல் நீருக்குள்
பொழுதெல்லாம் முக்குளித்து
ஒரேயொரு துளிநீரை
தேடி எடுத்து வந்தேன்...
தரைக்கு வந்த பின்தான்
புரிந்தது
அது கண்ணீரென்று…
ஆகாய வெளியெல்லாம்
தாண்டிச் சென்று
ஒரேயொரு மின்மினி(ப் பூச்சி)
பிடித்து வந்தேன்…
கைசுட்ட பின்தான்
புரிந்தது
நட்சத்திரம் என்று…
காலமற்ற கால வெளிகளைக்
கடந்து சென்றேன்…
“அகாலமாய்”ப் போன
நேர ஆயிடைகளைக்
குறித்து வைக்கிறேன்…
வாழ்வில்
வருடமாய்த்தோன்றிய நாட்கள்
கூறட்டும்
சோகமான வரலாறுகளை
என்றாவது ஒருநாள் -
அப்பொழுது
புதிதாய் ஒரு சரித்திரம் படைக்கலாம்
சந்தோஷமாய்…
நொடிகளாய் மறைந்த
இன்பங்களை
நுகர்ந்து பார்க்கிறேன் -
“காலப் பயணம்” சாத்தியமா
விஞ்ஞானம் கூறட்டும்
கடந்துதான் பார்க்கலாம்
என்றாவது ஒருநாள்..
- ஜுமானா ஜுனைட், இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.