குறுங்கவிதைகள்
பூரிப்பு..!
மழைக்குப் பின்
சிறு தூறல்...
மொட்டை மாடி
சிட்டுக்குருவி
உடல் நனைத்து
உள்ளம் பூரித்தது..!
*****
விதி..!
காலையில்
கரைந்தது காகம் - அதன்
கால் இடுக்கில் இருந்த
காய்ந்த மீன்,
கால் தவறியது-
கல்மேல் இருந்த பூனை
காலை உணவு உண்டது..!
*****
தலையெழுத்து..!
தாமரை இலைமேல்
தண்ணீர் பூச்சி..
தத்தித் தத்தித்
தாவிப் பிடிக்கையில்
தவளை பாவம்
தண்ணீர்ப் பாம்பு வாயில்..!
*****
தேவை ஒன்றே..!
எச்சில் இலை
எங்கே விழப் போகிறது.?
ஏக்கத்தோடு
போட்டி போடும்
மனிதனும், நாயும்
மண்டபத்துக்கு வெளியில்..!
*****
நீரில்லாக் குளம்..!
காதலால்
ஓடி ஓடி
நிலவைச் சுற்றும்
நீல மேகமே
நீ
கருவுற்று
கருத்து
கன மழை
பொழிய மாட்டாயா?
நிலாப் பெண்
குளிப்பதற்கு
நீரில்லை
குளத்தில்..!
- பாளை.சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.