பாளை சுசி கவிதைகள்
தெரியவில்லை..!
நான்
எனக்காக
கவிதை எழுதுகிறேன்
ஆனாலும் அதை
உனக்கு மட்டும்
காட்ட வேண்டும்...
உள் மனம் சொல்கிறது...
ஏன்?
தெரியவில்லை எனக்கு..!
புத்துணர்ச்சி..!
உனக்குத் தெரியுமா?
உன் கடிதத்தை
தனிமையில் அமர்ந்து
எழுத்துக் கூட்டி
எத்தனைமுறை
படித்திருப்பேன் என்று?!
எத்தனைமுறை படித்தாலும்
ஒவ்வொரு முறையும்
ஒரு புதுக் கவிதை படித்த
புத்துணர்ச்சி
என் மனதில்..!
உணர்வுகள்..!
உன்னைப் பிரித்து
என்னைத் தனித்து
பார்க்க முடியவில்லை..!
உன் காலில் முள் குத்தினால்
என் கால்கள் நொண்டுகின்றன..!
பயம்..!
என்னை விட்டு
விலகி விடுவாயோ?
இந்த பயத்தால்
நான்
உன்னை விட்டு
விலகியே இருக்க
விருப்பப் படுகிறேன்..!
ஆசை..!
“உன்னை எனக்குப் பிடிக்கும்”
இப்படி நான் சொல்வதைக் காட்டிலும்
“எனக்கு உன்னைப் பிடிக்கும்”
இப்படி நீ சொல்லி
நான் கேட்க
எனக்கு ஆசை..!
- பாளை.சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.