அம்மாவின் அன்பு
தத்தி தத்தி நடக்கத் தொடங்கியதும்
அம்மாவின் கைப்பிடி தேவையில்லாமல்
போனது
பொம்மைகளினுடனான நட்பு
அம்மாவின் அன்பு சுகத்தை
களவாடிச் சென்றது
நிலா காட்டி அம்மா சோறூட்டும் போது
அம்மாவின் வயிறு நிரம்பியதை
குழந்தையின் உள்ளம் உணர்ந்தது
விளையாட்டுப் பொருள் வேண்டி
அடம்பிடிக்கும் போது
அம்மாவின் பூச்சாண்டி
பயமுறுத்தலுக்கு அமுங்கிப் போய்விடும்
எல்லாக் குறும்புகளும்
தூளியில் வைத்து ஆட்டும் போது
அவள் பாடும் பாடல்,
இன்னும் தூக்கம் வரலையா
எனக் கேட்டு கன்னம் வருடுவது
என அம்மாவை தேவதையாகக்
கண்டது அந்தக் குழந்தை
யாருமற்ற தனிமையில்
பொம்மைகள் சலிப்பூட்ட
அம்மாவோடு கண்ணாமூச்சி ஆடுவது
குதூகலத்தைத் தரும்
அந்தக் குழந்தைக்கு
அப்பொழுதெல்லாம்
அம்மாவின் குழந்தைமை
அவளையும் மீறி வந்து
எட்டிப் பார்த்துவிட்டுச் செல்லும்.
- ப.மதியழகன்,மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.