சகி
வீடுவரை வந்துவிட்டு
தயங்கி வாசலிலேயே
நின்றான்
தயக்கமென்ன
வீட்டில் சோபாவும்,
நாற்காலிகளும் தவிர
வேறெவரும் இல்லை
என்றேன்
பரஸ்பர நலவிசாரிப்புகளுக்குப் பிறகு
நாவரண்டதால் தண்ணீர் கொடுத்தேன்
சொந்த வீடா என்றான்
பூர்விக சொத்து என்றேன்
அதற்கென்று ஒரு நேரம் வரணும்
என்று அடிக்கடி சொன்னான்
சவரம் செய்யப்பட்ட மோவாயை
கைகளால் தடவியபடி
தொழிலில் நொடிந்து போன
கதையை விலாவாரியாகச் சொன்னான்
சர்க்கார் உத்தியோகம் என்பதால்
நான் தப்பித்தேன் என்றேன்
அவன் கேட்காமலேயே
சிறிய தொகையை அவன்
கைகளில் திணித்தேன்
அடிக்கடி வா என்றேன்
சரி என்று தலையாட்டினான்
பால்ய கால சகியைப் பற்றி
நான் கேட்கவுமில்லை
அவன் சொல்லவுமில்லை.
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.