சொல்லும் சொல் செல்வதெங்கே...?
யாம் சொல்லும் சொல்லெல்லாம்
எங்கே செல்லும்…?
காற்றலையில் கரைவதனால்
வார்த்தைகள்
காணாமல் போயிடுமா...
கண்டபடி சிதறித்தான்
ஏழு
கண்டங்களும் உலவிடுமா..?
உலகின் காந்தமது
ஈர்க்கும் வடபுலந்தான்
விரைந்திடுமோ…
ஊசாட்டம் இல்லாத
இடமொன்று எங்கே
அங்கு சென்றொழிந்திடுமோ…
வார்த்தை பேசிடும் உதட்டளவில்
உறைந்திடுமோ
இல்லை
கேட்டிடும் இதயமெல்லாம் சென்று
குடியிருந்திடுமோ…
ஆறு குளம் மலைகளைத் தான்
அடைந்திடுமா
அண்டவெளி தாண்டி
வார்த்தை சென்றிடுமா…
இந்த வளி மண்டலத்தை
நிரப்பிடுமா…
இதுகாறும்
காணாதவொரு பொருளாய் ஆகிடுமா..?
இருதயத்தில் என்றென்றும்
இருந்திடுமா…
இரு தோள்புறத்தில் இருப்பாரை
அடைந்திடுமா…
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.