ஏய் குழந்தாய்...!

பூவில் ஒருபூவாய்
அழகிற்கோரணியாய்
அடியோ தாமரையிதழாய்
அகம்பாவம் அறியாதவளாய்
குணம் வெள்ளை நிறமாய்
குறுநகையால் வெல்வாய்
மகிழ்ந்தால்
மங்கலப்புன்னகையாய்...
மதியால்
மாநிலம்
காப்பவளாய்...
அழுதால்
ஆற்றிடை ஆம்பல் மலராய்...
அதிர்ந்தால்
நாற்றிடை நாதஸ்வரமாய்...
அயர்ந்தால்
தென்னங்கீற்றிடைப் பூவாய்
உறைவாய்.
நெற்றிப்பவளங்கள்
வியர் நீராய்...
ஓரவிழிசிந்தும் முத்துக்கள்
கண்ணீராய்...
நுரையீரல் பூங்கா தரும் இளந்தென்றல்
சிறுமூச்சாய்...
குரல் வளையில் எழுத்தாளர் தரும் கவி
ஒரு பேச்சாய்...
கதிர்க்கணைக்கு
மலர்வதனக்குடைபிடிப்பாய்...!
சிரித்தால்
ஒளிரும் திருவிளக்காய்...
திகைத்தால்
'திங்களில்' சிறுவடுவாய்...
சினந்தால்
செவ்விய ஓர் உதிப்பாய்...
சிந்தைத் தளபதி நீயானாய்..!
பணிந்தால்
அழகிய வில்லாய்...
பசிய இலைகளில்
பனியாய்...
இசைத்தால்
சுந்தரத் தமிழாய்...
ஈழத்தீவினில் தவழ்வாய்..
பூசும் நறுமண சந்தனமாய்
பூவிதழ் செதுக்கிய சித்திரமாய்
நடையில் தனிரக இலட்சணமாய்
நகைவிழியோ மின்னும் நட்சத்திரமாய்..!
முத்துப் பல் சிணுங்கும் வளையோசையாய்..!
சீருடைச் சிப்பிக்குள்
முத்தாய்...
தேரிடைப் பூவுக்குள்
தேனாய்...
நேர்த்தியாய்
பாடசாலையில் பயில்வாய்
சீரிய குழந்தாய்
சுறுசுறுப்பாய்...!
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.