பகடி வெண்பா!
தீட்டிய பாவில்தான் தீஞ்சுவையோ? இல்லை‘மை’
கூட்டிய பார்வையில்தான் கொங்(கு)உளதோ? –கேட்டவுடன்
நேற்றுவரை பாவென்றாய்; நேரெதிராய் நாளை‘மை’
ஊற்றிய பார்வையென்பாய் ஓர்ந்து! (1)
சித்திரம் சின்னச் சிலையொத்த மேனியினாள்
பத்திரம் அப்பாநீ பார்த்துக்கொள்; -அத்திரங்கள்
போடட்டும் காமன்; புதுமண மக்காள்!நன்(கு)
ஆடட்டும் கட்டில் அசைந்து! (2)
இடம்மாறும் பெண்ணால் இடம்மாறும் நெஞ்சம்;
இடம்மாறும் பெண்ணில் இயைவால்; -இடம்மாறும்
யாவும் அணைப்பால்;யார் ஆண்பெண்ணென்(று) யார்சொல்வார்?
ஓவும்பூங் காற்றும் உணர்ந்து! (3)
சந்தியா காலத்திற் சந்தித்து நீரிருவர்
சந்தியாக் காலத்தைச் சாடுவிரோ? –சிந்தைநீ
செய்கும் தமிழ்மொழி தேமொழிக்கீ டில்லையென்று
வைகுமோ நண்பா!உன் வாய்! (4)
நான்என்று சொல்கின்ற நாள்ஓடிப் போச்சு(து)இனி
நான்அன்று நாம்என்று நாமொழியும்; –தேன்இன்றைக்(கு)
உள்ளங்கை தன்னில்; உணத்தான் தடைபோடும்
உள்ளபடி நாணம் உயர்ந்து! (5)
நங்கை தலைசாயும் நாணத்தால் அப்பவும்என்
பங்கைத்தா என்றே பகர்வாயோ? –நுங்குநிகர்
நாவால் அவள்பேர் நவின்(று)அரு கேஅழைத்துத்
தேவாய் சுவைக்கையில் தேர்ந்து! (6)
உண்ணா வறண்டே உடலும் உதறுமப்பா;
உண்ணாய் பசித்தும் ஒருவாய்; -எண்ணாய்
எதையும்; அணங்கின் எழில்கண்(டு) உளறும்
அதையும் இதையும்வாய் ஆம்! (7)
பாயே இலையாக பாவை உணவாக
நீயோ பசியில் நெலிவாயே; -நீயாக
அள்ளித்தான் உண்ணவும் ஆகாதே நாணத்தால்
உள்ளந்தான் நோகும் உடைந்து! (8)
பசிக்கும்; பசும்பால் பழம்பக்கம் இருந்தும்
புசிக்கும் நினை(வு)அற்றுப் போகும்; -புசிக்கின்
புளிக்கும்; உளம்அந்தப் பூவை இடம்மேவிக்
களிக்கும் தடைகள் கடந்து! (9)
சேவல் எழுப்பச் செழுங்கதிரோன் வான்மேவ
போவதேன் அல்இப் பொழு(து)?என்றே –ஆவல்
தணியா மனத்தாய்! தவிதவிப்பாய்; மற்ற
பணியாவும் போகும் மறந்து! (10)
மாசறு பொன்னே! வலம்புரிசங் கே!என்று
பேசரு பேச்செல்லாம் பேசியே -நேசமுடன்
மாதிரை யாகின்ற மஞ்சப் பொழுதுகளை
ஆதிரைச் சித்தா!நீ ஆள்! (11)
உடலே விறகா; உளமே உலையா;
அடடா விழியே அனலா; –நடக்கும்
சமையல் முடிவில் சனிக்கும் மழலை;
உமையே உருவாய் உரித்து! (12)
- அகரம் அமுதா, சிங்கப்பூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.