மறுபடியும் வருவாயா..?
நிலாப் பெண்
நீ தானோ..?
ஏணி வைத்தும் எட்டா தூரம்
ஏவுகணைக்கும் விதியில்லை
முடவன் - கொம்புத்தேன் கதை..!
பூமியில் நீயா...?
பூரித்துப் போகிறேன்...
பூமகனுக்காய்
வான் நிலாவா...?
என் வீட்டுக் கிணற்றிலா...?
எட்டிப் பார்க்கிறேன்
கையெட்டும் தூரம்...
இரவின் இனிமை
தனிமை
நிசப்தம்
குளிர் தென்றல்...
நீ குளிக்கும் அழகில்
குதூகலித்துப் போகிறேன்...
பறக்கும் வௌவால்
தலைக்கு மேல்...
தவறி விழுந்த
எச்சில் வேப்பமுத்து
கிணற்று நீரில்...
கலைந்து போனாய்
காணாது போனாய்
தேடிப் பார்க்கிறேன்
விண்ணிலும் இல்லை
மண்ணிலும் இல்லை...
மறைந்து கொண்டாயோ...?
மேகத்திரையிலா...?
தவறு செய்தவன் நானல்ல
தவற விட்டவன் நான்
மறுபடியும் வருவாயா..?
- பாளை. சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.