புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் (தன்னாட்சி) கல்லூரியில் தமிழாய்வுத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் சு. மாதவன் தமிழ் இலக்கியத்தில் இளநிலைப்பட்டம் (B.Lit), தமிழ்ப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.A), தத்துவப் பாடத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil) மற்றும் முனைவர் பட்டம் (Ph.D) ஆகியவைகளைப் பெற்றிருக்கிறார். இவர் ஒன்பது நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது 57 ஆய்வுக் கட்டுரைகள் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு இதழ்களில் இவரது 86 கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. முனைவர் பட்ட ஆய்வு நெறியாளராக இருந்து வரும் இவரின் வழிகாட்டுதலில் இதுவரை 3 பேர் முனைவர் பட்டத்தினையும், 11 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தினையும் பெற்றிருக்கின்றனர்.
இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கிய ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் கூடிய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் ‘செம்மொழி இளந்தமிழறிஞர் விருது’ உட்பட பல்வேறு அமைப்புகள் வழங்கிய விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். மேலும், பல்கலைக் கழக மானியக்குழு எல்லாப் பாடத்திற்கும் சேர்த்து 100 பேருக்கு வழங்கிவரும் " பல்கலைக் கழக மானியக் குழு - ஆராய்ச்சி விருதாளர் (UGC RA) நிலைக்கு 2014 ஆம் ஆண்டில் தேர்வாகி முதுமுனைவர் ஆய்வை நிறைவு செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முத்துக்கமலம் இணைய இதழின் கட்டுரைப் பகுதிக்கான சிறப்புத் துணையாசிரியர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.