முனைவர் ம. தமிழ்வாணன்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வேப்பங்குடி என்னும் சிற்றூரில் 29-06-1978ல் வேளாண்குடியைச் சேர்ந்த தெய்வத்திரு வெ. மருதையன் - திருமதி தமிழரசி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர் பள்ளிப் படிப்பை, கடம்பன்குடி அரசு தொடக்கப்பள்ளியிலும், அகரப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியிலும், திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி அய்யர் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றார். கல்லூரிப் படிப்பை, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி தேசியக் கல்லூரியில் பயின்று பி.ஏ. (வரலாறு), எம்.ஏ.(தமிழ்), எம்ஃபில், பிஎச்.டி. போன்ற பட்டங்களைப் பெற்றார். மேனாள் பேராசிரியர் முனைவர் சாமி. திருமாவளவனின் முனைவர் பட்ட ஆய்வாளர் (ஆய்வுத் தலைப்பு: தமிழ் இலக்கியங்களில் காவிரி ஆறு) ஆவார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.(மொழியியல்), பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.(வரலாற்றியல்), பட்டமும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பி.ஜி.டி.ஜே.எம்.சி.(இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்) பட்டயமும் பெற்றுள்ளார்.
12.10.2017 முதல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சுவடியியல் துறையில் பணியாற்றி வரும் இவர்;
1. பாரில் தமிழர் பண்பாட்டின் தனித்துவம் (2013)
2. சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே (துணைவியாருடன் இணைந்து) (2014)
3. செந்தமிழ்க் காவிரியின் வளம் (2015)
4. நானாற்பது நூலும் வாழ்வும் (2016)
5. இதழ் விளம்பரச் சுவடுகள் (2016)
6. தொல்தமிழும் செம்மொழியும் (2017)
7. தொல் தமிழ் முருகு (2017)
8. தொல்தமிழர் தோற்றமும் தமிழும் (2018)
எனும் ஏழு நூல்களை எழுதியிருக்கிறார்.
இதுவரை இவர் 60 ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியிருக்கிறார். இதில் 50 ஆய்வுக் கட்டுரைகள் செவ்விலக்கியம் சார்ந்தவையாகும். செந்தமிழ்ச் சுடர், தமிழ்ச் சுடர், இலக்கியச் சுடர், செந்தமிழ்ப் பாரதி, முத்தமிழ் பாரதி, ஆய்வுலகச் சிற்பி, ஆய்வுலக அறிஞர், ஆய்வுலக வேந்தர், சைவத் தமிழ்ச் சுடர் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
கட்டுரை - இலக்கியம்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.