தொடர் கதை
-2
முத்த
யுத்தம்
-எஸ்.
ஷங்கரநாராயணன்.
30.
ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டா...!

உள்ள நுழைஞ்ச மயக்கமே பெருமயக்கம்.
வேலைக்கு நெருக்கடி வந்திருமோன்னு ஒரு உதறல். தவிர கதவு வேற சாத்திட்டாளே மவராசி.
குப்புனு அந்தாக்ல ஒரு இருட்டு. அந்த ரூமுக்குள்ளயும், அவனுக்குள்ளயும். பாத்து
மாப்ள, எங்கயும் இடிச்சிக்கிறாதே...
அவ மேல இடிக்கலாம். தப்பில்லை என உற்சாகமான உணர்வை ஏற்றிக் கொண்டான், என்றாலும்
கவனமாய் அதைத் தவிர்த்தான்.
ஆனால் இருட்டில் அவள் தொடர்ந்து பேசினாள்.
"நல்லா நனிஞ்சிட்டீங்க"
"உங்க பாராட்டுக்கு நன்றி"
சிணுக்கென சிரித்தாள். ஆத்தி, சிரிக்காய்யா...முன்னேறலாம் போலுக்கே.
கண் இப்ப பழகிட்டது. உள்ளே சிறு வெளிச்சம் கசிந்து கிடந்தது. அவளது உருவ
எல்லைகள் தட்டுப்படுகிறாப் போல. அவளுக்குத் தெரிந்த இடம் என்பதன் சகஜ நடமாட்டம்.
"சாப்ட்டாச்சா?"
அட என் அம்மையில்லா. பொம்பளையாள் கேள்வி அம்சமே தனிதான். எந்த ஆம்பளையாவது ஒரு
பொம்பளைகிட்ட மொதல் கேள்வி இப்டி கேட்டதா சரித்திரம் கிடையாதப்பு.
பசியை விட ஒன்றுக்குத்தான் அவசரம். அவ வர்லியானா அந்த வேலையை கார் மறைவிலேயே
முடிச்சிருப்பான். இந்த மாறி சம்யங்களில் கார் ரொம்ப ஒத்தாசை.
மணத்துக் கிடந்தது உள்ளே. மனோன்மணி வீடுல்லா. புதுவரவு நம்ம பி.பி.பி -
மகாராசனுக்கு முதலிரவப்போவ்! கோலாகலத்துக்குக் குறைவில்லை. இங்கியே இந்த
வாசனையின்னா மாடில இன்னும் ஓகோ... ஓகோகோ-தான்! எல்லாத்துக்கும் ராஜயோகம் வேணும்
எனக்கு இருக்கா இல்லியா... தெர்ல! என்னவோ கேட்டாளே... ஆமாமா சாப்டாச்சா? - அட
எப்பவோ சாப்ட்டது, இப்ப மணியென்னம்மா?
இருக்கிற அவசரத்துக்கு அங்கியே ரசாபாசமாயிரும் போலிருந்தது. நல்லவேளை "கை
கழுவிட்டு வாங்க"ன்னு அவளே வழிகாட்டினாள். அவன் உள்ளே போய் அவனுடைய அந்தப்
பிரச்சனையையும் தீர்த்து கைகால் கழுவிக்கிட்டு வந்தான்.
தன் வீட்டு மெய்ன் ரூமைவிட டாய்லெட் சுத்தமாக இருந்தது. புண்ணியவதி. உள்ள
கூப்ட்டதுமில்லாம சாப்பாடு வேற போடறாளே.
ஒவ்வொரு பொண்ணுட்டயும் ஒரு தாயம்சம் இருக்கு. ஒவ்வொரு ஆண்கிட்டயும்...? அவர்கள்
நாய் வம்சம். அவன் மாமனார்... ஒரு நாளாவது கதவைத் திறந்தாப்ல நல்ல வார்த்தை
பேசின ஞாபகமில்லை. சாப்ட்டாச்சா?- வை விடு. கதவைத் தொறந்து விட்டுட்டு அந்தாக்ல
போயி மல்லாந்துர்றது... ஒரு சிரிப்பு, ஒரு விசாரிப்பு கிடையாது. எல்லாம்
காலைலதான்.
நல்லா சோப்பு போட்டு - வாசனை தூக்குது. ஏட்டி, கீழ்ப்படியா... இதைத் தேச்சிதான்
குளிக்கியா... ஒரு முறை வாசனை பிடிச்சிக்கிட்டான் - கைகால் கழுவினான். வெளிய
வருமுன் ஆறிய உணவை சூடு பண்ணி வைத்திருந்தாள். சூப்பர் கவனிப்பா இருக்கேய்யா.
மாடில பால் பழ பரிவர்த்தனை. பாலிருக்கும்... டொடாய்ங். பழமிருக்கும் டொடாய்ங்.
பசியிருக்காது... பஞ்சணையில் காத்து வரும்... என்னாத்துக்குக் காத்து வருது?
ஏர்பில்லோவா? - அந்த விடு மாப்ளே... இங்கத்த சங்கதியப் பார்.
சாப்பிடும் போது நெகிழ்ச்சியாய் இருந்தது. கிராமத்து ஆள் அவன். என்னவோ யார்
நமக்கு நல்லது செஞ்சாலும், நினைச்சாலுமே கூட நன்றி பாராட்டும் மனம். வணங்கி
வாழ்த்தும் மனம்.
முகக்குறிப்பைப் பார்த்துச் செயல்படும் மனம் பெண்களுக்கு சாஸ்தி. நம்மாள் முகக்
குறிப்பைப் பார்த்து எதிரா செயல்படுவான்கள்... பங்காளி வீட்ல தீப்பிடிச்சா
காலைக் கட்டிக்கிட்டு அழுதானாம்.-னு வ்சனம்.
யாரு கண்டா? தீய வெச்சவனும் இவனேவா இருக்கிறதும் உண்டுல்லா.
"சாம்பார் தீர்ந்துட்டது...ரசம்தான்" என ஊற்றினாள்.
"எங்கூட்ல நைட்ல மிச்சமானா சாம்பார் ரசம் கீரை எல்லாம் கலந்து ஊத்தி
வெச்சிருப்பா. அதுக்கு இது தேவல..."
அவளுக்குக் கொட்டாவி வந்தது.
"சாரி"
"நான் கொட்டாவி விட்டதுக்கு நீங்க ஏன் சாரின்றீங்க?" என்றாள்
"சொல்லப்படாதா? சாரின்னு சொன்னதுக்கு சாரி..."
அவள் கொட்டாவி விட்டதைப் பார்த்து அவனுக்கும் கொட்டாவி வந்தது. கொட்டாவி விட்ட
பின் திரும்ப "சாரி" என்றான்.
"நேரம் ரொம்ப ஆயிட்டு... தூக்கத்தை எனக்காகக் கெடுத்துக்கிட்டீங்க..."
பரவால்ல - என்று சொல்வாள் என எதிர்பார்த்தான். "ஆமாம்" என்றாள். "ஆனா பழகிட்டது"
என்றாள் கூடவே... உடனே அந்த வேலுச்சாமி ஞாபகம்தான் வந்தது.
அவனும் இப்டி உள்ள வந்து உக்கார்ந்து தின்னிருப்பானோ? அட நாயே, அதப்பத்தி
உனக்கென்ன?
விறுவிறுவென்று சாப்பிட்டான். என்ன இருந்தாலும் வீட்டுச் சாப்பாடு எடுப்பே
தனிதான். கைகழுவுகையில் கவனித்தான். வெளியே மழை நல்லா அடி வெளுத்து வாங்கிக்
கொண்டிருந்தது. என்னா அவ்ள ஆத்திரம் தெர்ல.
நல்ல வேளை உள்ள வந்தே - புண்ணியவதி நல்ல வேளை கூப்ட்டா.
அவன் வெளியே வருமுன் படுக்கை விரித்திருந்தாள். படுக்கைக்கு அத்தனை அவசரமாடி
உனக்கு? அடியே ராசாத்தி...
மனசில் பாட்டு கிளம்பல், ஆடுமடி தொட்டில் இனி "பத்து" திங்கள் போனால்...
மாடியப்போல பீடா... வெத்தலை மடிப்புன்னு எதும் கவனிப்பு உண்டா...?
சரி அவளுக்குதான் என நினைத்தான்.... அவள் எப்போதும் படுக்கும் இடம், படுக்கைகள்
என யூகித்தான். மேலே மின்விசிறி. எலேய் இன்னிக்கு என்ன? ராஜ உபசாரம்
அமர்க்களப்படுது. மழைக்குளிர்ல உஸ்ஸ்சுனு பல் தந்தியடிக்க உடல் வெடவெடக்க வெளிய
கெடக்க வேண்டிய ஆள் நீ....
"படுங்க" என்றாள்.
"நீங்க?"
(என் பக்கத்திலேயேவா?)
"நான் அப்டி படுக்கறேன்..."
"அங்க ஃபேன் இல்லையே?"
"பரவால்ல"
"என்ன பரவால்ல... நீங்க இங்க ஃபேன் ஓடல. நான காத்தாட அங்கியே படுக்கிறேன்."
என்றாள்.
அவளைப் பார்த்தான்.
"காலைல பாத்திர்ரலாம். நானே பாத்திருவேன்" என்றான்.
"கொசு கடிக்குமா?"
"கொசுன்னா அது கடிக்கத்தான் செய்யும்" என்றாள்.
"ஆனா எங்க வீட்ல கொசு இல்லை..."
"அதுக்கு பதிலா நீங்க கடிக்கறீங்க"
போட்டுத் தாக்கறாளேய்யா. ஆச்சர்யமாய் இருந்தது - அவள் எத்தனை ஜோராப் பேசுகிறாள்.
மேலே லைட் அணைந்திருந்தது. அது வேறுலகம் போலிருந்தது. அவனால் யூகிக்க முடியாத
உலகம்... ஆ, அவனால் இயங்க முடியாத உலகம் அது... என்று தோணியது.
அட ஆமாம், நான் - இது உண்மை - என் மனைவியைக் காதலிக்கிறேன்... என்னால் "வேறு"
வகையாக இயங்க முடியாது...
அதெல்லாம் சும்மாடோய்... நாளைக்கு, அட இன்னிக்கு ராத்திரியே கூட இவளோட ஓர் "புதிய"
உறவு கிளைக்காதா...?
தெர்ல - ஆனால் அதைக் கொச்சைப்படுத்தி விட முடியாது.
அட இவளுக்கு என் "முகம்" தெரியும் என்று திடீரென்று பட்டது.
ஓர் இரவில் தனக்காக இல்லாமல், மனைவிக்காக வான்கோழி பிரியாணி தூக்கில் கேட்டவன்.
அதுவே இப்போது எனக்கு அளிக்கப்படும் மரியாதை! முதல் அபிப்ராயம் எப்போதும்
அழியாதும்பாங்க.
தவிர அந்தக் கண் - அதில் தெரியும் அதனை உலகமும்... அவனை யூகிப்பது கடினமல்ல.
நான் அப்பாவி. எளியவன். சிறு பதட்டத்துடன் நடமாடும் குழந்தை. உள்ளே மோதும்
ஆசைகள். வெளியே பயம். தவிரவும் மனத்தின் கட்டுக்கோப்பு இயல்பாகவும்,
வளர்ப்புப்படியும், குடும்ப அமைப்புப்படியும் அமையப் பெற்றவன்.
எவனாவது பின்னாடியே வர்றாமாதிரித் தோணினா பயந்திருதுல்லா மனசு. டாய்லெட்
நெருக்கிருது... அந்தான்னிக்கு பட்டணத்துல ஒருத்தன்... பின் தொடர்ந்து வந்தான்.
ஏதாவது விசாரிக்க வந்தானா, கைல கெடக்க காசை கத்தி காட்டி மிரட்டி வாங்கிக்க
வந்தானான்னு பதட்டம் இவனுக்கு. நடையை எட்டுப் போட்டுப் போகப்போக கூடவே வர்றான்...
நாலு தெரு திரும்பியும் கூடவே வெரட்டிக்கிட்டு வந்ததைப் பார்த்ததும்
டர்ராயிட்டது. சட்டுனு ஒரு மூத்திரைப்பிறைல ஒதுங்கினா அவனும் உள்ளியே
வந்துட்டான். பக்கத்து கேபினுக்குள் ஏறி நின்னு அவனும் அவிழ்த்து விட்டுக்கிட்டே
பேசினோம் பாருய்யா. அதான் வசனம்.
"ரொம்ப தேங்ஸ். நானும் ரொம்ப நேரமா இதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்..."
வேலுச்சாமிக்கு இந்த மரியாதை இங்கே நிச்சயமாய்க் கிடைக்காது - கிடைத்திருக்காது
என்றிருந்தது. அட ரொம்பத் தெரிஞ்சாப்லதான் அலட்டிக்காதே... என தன்னைக்
கட்டுப்படுத்திக் கொண்டான்.
ஏட்டி உங்க எசமானி மாதிரி நீயும் ஒரு தடவை சோம்பல் முறிச்சிக் காமிக்கறியா?
புரண்டு படுத்தான். மனம் அமைதியாய்க் கிடந்தது. மல்லாக்கப் படுத்ததில் முதுகில்
சுகப்பரவல். ஆசுவாசம்...
-த்ச், தனத்துக்கு உடம்பு எப்டி இருக்கோ பாவம். அவளுக்கு ஒரு தடவை நல்ல
டாக்டரைப் பார்த்து வைத்தியம் பண்ணினா நல்லது. சின்ன மழைக்கே அவளுக்கு ஜலதோசம்
மூக்கை ரொப்பி மூச்சுத் திணறிருது. இந்த மழைல என்ன பாடுபடுதோ?
"தூக்கம் வரல்லியா?"
"நீங்களும் தூங்கலியா?" என்றான். "சாரி, உங்க வழக்கமான இடத்தை எனக்குக்
குடுத்திட்டீங்களா?"
"அதைப்பத்தி இல்ல... இங்க பேச்சுத் துணைக்கு எனக்கும் யாருமே கிடையாது. நானும்
அம்மாவுந்தான்" என்றாள். பேசச் சொல்கிறாளா?
"ஏன், வேலை ஒத்தாசைக்குன்னு வேற யாரும் கிடையாதா?"
"நான் ஒண்டிதான்... வர்ற ஆம்பளை யார்கிட்டேயும் பேச எனக்குப் பிடிக்கவும் இல்ல..."
நல்ல விசயம். வேலுச்சாமி வந்தா பேசண்டாம். எளநி பறிச்சிருவாப்டி.
"புரியுது" என்றான் தோரணையாய். "அப்ப நைட்ல சோறு மிஞ்சிட்டதே?"
"காலைல எதும் நாய் வந்தாப் போடலாம்னிருந்தேன்..."
"ஏண்டா கேட்டோம்னு ஆயிட்டது.
"எத்தனை குழந்தைங்க உங்களுக்கு?" என்றாள் திடீரென்று.
"ஒரு பொண்ணு... தனலட்சுமி" என்று சொல்லும் முன் லேசாய் விக்கியது. "அதுக்கு
உடம்பு சரியில்ல..."
"அடடா" என்று எழுந்து உட்கார்ந்தாள். "என்ன உடம்புக்கு?" என்றாள்.
"நீங்க படுங்க. உடம்பு சரியில்லன்றது - எனக்கில்ல, என் பொண்ணுக்கு" என்றான்.
"தெரியுது" என்றாள். "நீங்க சாப்பிட்ட ஜோரே சொல்லிச்சு. நல்லாத்தான் இருக்கீங்க...
(நல்லாத்தான் தின்னீங்க) குழந்தைக்கு என்ன உடம்புக்கு?"
"தெர்ல"
"டாக்டரைப் பாக்கலியா?"
"உடம்பு இவளுக்குத்தான் சரியில்ல. இவளைத்தான் பார்க்கணும். டாக்டரை எதுக்குப்
பார்க்கணும்?" என்றான். ஆனால் அவனுக்கே அந்த எகத்தாளம் வராமல் அழுகை
வந்துவிட்டது.
"துட்டு இல்லியாக்கும்..."
அவள் எழுந்து கொண்டாள். "அதோட இங்க வந்துட்டீங்களாக்கும்?" என்றாள். "இந்த
மனுசன் இங்க உங்களை இழுத்தாந்திட்டாராக்கும்?" என்றாள். உள்ளே போய் விளக்கைப்
போட்டது தெரியும்.
அவனை நோக்கி வந்தாள். "இந்தாங்க" என்று ஒரு நூறு ரூபாய்த்தாளை நீட்டினாள்.
ஐய யப்பாடி - உணர்ச்சி உச்சந்தலை அடிச்சதுய்யா ஒற்ற அடி அவனை. "இல்ல தாயி வேணாம்"
என்றான் தாள இயலாமல்.
"ஏன்?"
"காலைல முதலாளிகிட்ட பாத்துக்கறேன்..."
"எங்கிட்டேன்னா வேணாமா?"
இதற்கு என்ன சொல்வது?
"முதலாளி தர்லியானா என்ன செய்வீங்க?"
அவன் விழித்தான்.
"பிட்ங்க"
அந்தாக்ல அப்டியே அழுதிட்டான்.
மாடியில செயற்கை உல்லாசம். கீழே உறவுப் பர்வசம்... எத்தனை விசித்திரமான கலவைக்
காட்சி.
"திருப்பித் தந்திருவேன்" என்று உளறியபடி வாங்கிக் கொண்டான் அவசரமாய். "இதை
வேணான்னு சொல்ல எனக்கு உண்மைல தைரியம் இல்லை." என்றான்.
"உங்களுக்கு ஒரு நூறு ரூவா குடுத்து இங்கக் குறையப் போறதில்ல"
"அதுக்காக... உங்ககிட்ட நான்..."
"நம்மைப் போல கஷ்டப்பட்ட ஜனங்கதான் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும்"
என்றாள்.
"காரல் மார்க்ஸ் சொன்னது" என்றான் திடீரென்று.
"பெரிய அறிவாளியா இருப்பாராட்டம் இருக்கே?"
"எப்டி தெரியும்?"
"நான் சொன்னதைச் சொல்லிருக்காரே" என்றாள். யாரது என்று அவனைப் பார்த்தாள்.
"எங்க சித்தப்பா..."
"பேரே என்னவோ போல இருக்கு..."
"ரொம்பக் காரம் சாப்டுவாரு. காரசாரமாப் பேசுவாரு" என்றான். "அதான் பட்டப்பேர்
அமைஞ்சிட்டது..."
"உங்களுக்கு ஊர்ல என்ன பேர்?"
"தெர்ல... படுபாவிப் பயல்க எதாவது வெச்சிருப்பங்க..."
"உங்க பேர் என்ன?" என்று கேட்டாள் அவள்.
"அய்யம்பெருமாள்" என்றான்.
"நல்ல பேர்தான்.. எதுக்கெடுத்தாலும் தெர்லன்றீங்க... அய்யம் பெருமாள்! இதே
பட்டப்பேர் மாதிரி சூப்பராயிருக்கு பேரு..."
"இந்த வீட்டில், அதும் வீட்டுக்குள் இப்டியோர் விநோத ராத்திரி... நான்
எதிர்பார்க்கல" என்றான்.
"நானும்" என்றாள் கொட்டாவி விட்டபடியே. "என்னாலும் நம்ப முடியல..." என்றவள்,
உங்க சித்தப்பா இத்தனை அறிவாளின்றதை..." என முடித்தாள்.
அவனுக்கும் கொட்டாவி வந்தது.
"உங்களுக்கு எத்தனை குழந்தைங்க" என்றான்.
"தெர்ல" என்றாள்.
அவன் அவளைப் புரியாமல் பார்த்தான்.
"ஏன்னா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல" என்றாள் சிரிக்காமல்.
"ஏன் கல்யாணம் பண்ணிக்கல?"
"தெர்ல!" என்றான்.
அவனுக்கு திடீரென்று பத்மினியின் தம்பி ஞாபகம் வந்தது. ரெண்டையும் போட்டு வண்டி
மாடாப் பூட்டிருவமா?
தங்கள் நல்வரவை விரும்பும்- அய்யம் பெருமாள்ன்னு கல்யாணப் பத்திரிகை. யானும்
அவ்வண்ணமே கேட்டுக் கொள்கிறேன் - காரல் மார்க்ஸ்
"தூங்கலாம் நேரமாயிட்டு" என்றவள் தூங்கிப் போனாள் சட்டென்று.
நடந்தது கனா போலிருந்தது. ஆனால் பையில் அவள் தந்த துட்டு கிடக்கிறது. எத்தனை
நல்லவள் இவள். எத்தனை மரியாதையாய் இயல்பாய் என்னை நடத்துகிறாள். அவள் பேரே
எனக்குத் தெரியாது. என்னை எத்தனை நம்புகிறாள்... அட எத்தனை அமைதியாய்த்
தூங்குகிறாள்.
காலையில் குழந்தையை நல்ல மருத்துவரிடமே காண்பிக்கலாம் உற்சாகமாய் வந்தது.
தூங்க ஆரம்பித்தான்.
(முடிந்தது.)
தொடர்கதை
பகுதி-29

|