........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
|
a |
மனம் திறந்து-68 அன்பு செலுத்துவோம்!
இந்த உலகத்தை செலுத்தும் சக்தி அன்பு மட்டும்தான். பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பது இந்த அன்பு மட்டும்தான். இன்பமும் துன்பமும் நிறைந்த நம் வாழ்க்கையில் நமக்கு ஒரே ஆறுதல் பிறர் நம் மீது செலுத்தும் அன்பு மட்டும்தான். ஒருவரது வாழ்க்கை சந்தோசமாக போகும் போது அவன் உற்றார், உறவினர்கள், உடனிருப்போர் என்று யாரையும் மதிப்பதில்லை. அதே நேரத்தில் அவனுக்குத் துன்பம் வரும் போது அதே மனம்தான் தன் சொந்தம்பந்தம், உற்றார் உறவினர் என்று தேடி அலைகின்றது. பிரச்சனைகள் உள்ள போதும், பிரச்சனைகளைப் பிறரிடம் சொல்லும் போதும், நமக்கு நாமே பாதுகாப்பாக உணர வைப்பதுதான் இந்த அன்பு என்ற ஆயுதம். இன்று சமுதாயத்தில் மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருப்பது இந்த அன்பு என்ற வார்த்தையில் அடங்கியிருக்கும் முதியோர்களின் பிரச்சனைகள்தான். வயது இருக்கும் வரை யாரையும் தேடாத அவர்களின் மனம் வயதானவுடன் தன் மகனோ அல்லது மகளோ தன்னிடம் அன்பாகவும் பாசமாகவும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் விரும்பும் அன்பை மட்டுமே. ஆனால், இன்று பெரும்பாலான வீடுகளில் உள்ள முதியோர்களுக்கு அவர்கள் விரும்பும் அன்பு கிடைப்பதில்லை. அவர்கள் ஒரு சுமையாகவே கருதப்படுகின்றனர். இதற்குச் சான்றாக உண்மையில் நடந்த சம்பவத்தை நாம் அனைவரும் நாளிதழ்களில் படித்திருப்போம்.
தினமும் செய்தித்தாளில் ஏதோ ஒரு பக்கத்தில்
இந்த மாதிரியான செய்தியை நாம் படித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். சமீபத்தில்
மூதாட்டி ஒருவர் தன் சொந்தப் பிள்ளையால் கைவிடப்பட்டு பஸ் நிறுத்தத்தில்
விட்டுவிட்டு இரக்கமே இல்லாமல் வீடு வந்து விட்டனர். தன் மகனிடம் அந்தத் தாய்
கேட்டது காசோ, பணமோ இல்லை. பாசத்தை மட்டும்தான். கடைசிக்காலம் வரை தன் மகனோ
அல்லது மகளோ தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும்தான்
அந்த தாயிடம் உள்ளது. அன்பு என்ற வார்த்தை ஆயிரம் அர்த்தங்களுடன் பொதிந்த
வார்த்தை. இதுதான் அன்பு என்று யாராலும் வரையறுத்துச் சொல்ல இயலாது. அன்பு,
பாசம், காதல், நட்பு என்று பல்வேறு பெயர்களில் நாம் பார்த்தாலும் எல்லாமே அன்பு
என்பதைத்தான் மையப்படுத்துகிறது. ஒரு மனிதன் தன் தாயையோ அல்லது உறவினர்களையோ
நேசித்தால் “அது பாசம்” என்றாகிறது. அதுவே தன் காதலியிடமொ அல்லது காதலனிடமொ
அன்பாய் இருந்தால் அதை “காதல்” என்கிறோம். தன்னைச் சுற்றி உள்ளவர்களிடமோ அல்லது
நண்பர்களிடமோ செலுத்தினால் அது “நட்பு” என்றாகி விடுகின்றது. ஆகவெ காதல், அன்பு,
பாசம், நட்பு என்று பல பெயர்களில் பார்த்தாலும் அது அன்பு என்ற ஒற்றைச்
சொல்லில்தான் உருவாகிறது என்பதை மனிதர்களாகிய நாம் மறந்து விடக்கூடாது. அன்பு
என்ற உணர்வு, உன் மனதிலிருந்து எழ வெண்டும். சந்தோசத்தை விரும்புவதும்,
கடவுளிடம் அன்பாக இருப்பதும், தாயை நேசிப்பதும், காதலிப்பதும் உணர்வுப்
பூர்வமாக செயல்படுத்த வேண்டும். மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு
தரக்கூடிய ஒரே மருந்து அன்பு ஒன்றுதான். ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால்
அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் இன்று வரை உணராமலிருப்பதுதான்.
|
முகப்பு |